Coolie Censor Review: கூலி படத்தை சென்சாரில் பார்த்தேன்.. கதை சுமார் தான்.. ஆனால், உமைர் சந்து விமர்சனம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம், சர்வதேச தணிக்கைக் குழுக்களின் சென்சாருக்கு உட்படுத்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரஜினிகாந்தின் 171வது படமாகும்.
இப்படம் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் முதல் படமாகும். நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நித்யா ராம், சார்லி, ஜூனியர் எம்.ஜி.ஆர் போன்ற நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். நடிகர் அமீர்கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

'கூலி' படத்தின் கதை, கடத்தல்காரராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், பழங்கால தங்கக் கடிகாரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட திருடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது பழைய குழுவை மீண்டும் ஒன்றிணைப்பதைச் சுற்றி நகர்கிறது. இது பல பரபரப்பான சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாயைச் சேர்ந்த உமைர் சந்து, 'கூலி' ஒரு "ஒன் மேன் ஷோ" திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர், "கதை மற்றும் திரைக்கதை சுமாராகத்தான் உள்ளது என்றும், உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் பலம் என்றும் பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. ஒரு சர்ப்ரைஸும் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
"மொத்தத்தில், ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு பைசா வசூல் மாஸ் படம். பாருங்கள்," என்றும் சந்து தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தப் படத்திற்கு 3.5 ஸ்டார் ரேட்டிங்கையும் வழங்கியுள்ளார். 'கூலி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.
தக் லைஃப் படத்துக்கு உமைர் சந்து பிளாக்பஸ்டர் என விமர்சனம் கொடுத்திருந்த நிலையில், அந்த படம் அட்டு ஃப்ளாப் ஆகிவிட்டது. படங்களை பார்க்காமலே இவர் விமர்சனம் கொடுத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளையும் ரசிகர்கள் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் திரைப்பட வகைப்பாட்டு வாரியம் (BBFC) 'கூலி' படத்திற்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என சான்றிதழ் அளித்துள்ளது. இதில் வன்முறை, அச்சுறுத்தல், திகில் காட்சிகள் 5-க்கு 4 என்ற அளவில் இருப்பதாகவும், சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தணிக்கை வாரியம் (NC16) 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என சான்றிதழ் வழங்கியுள்ளது. 'கூலி' திரைப்படம் இந்தியத் தணிக்கைக் குழுவால் 'ஏ' (பெரியவர்களுக்கு மட்டும்) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், டிக்கெட்டுகள் பலருக்கும் கிடைக்காத அளவுக்கு வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











