Coolie Official Box Office: விசிலு பறக்குதா.. லியோ வசூலை பந்தாடிய கூலி.. 151 கோடி பக்கா மாஸ்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 151 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் மிகப்பெரிய ஓபனிங் சாதனையை படைத்த படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் அடித்து நொறுக்கி அசால்ட்டு காட்டியிருக்கிறார்.

கூலி திரைப்படம் சுமார் 5000க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் பல வெளிநாடுகளிலும் வெளியானது. முதல் நாளுக்கான டிக்கெட் பிரஷர் அதிகம் இருந்த நிலையில், வசூல் சாதனை விண்ணை முட்டியுள்ளது.
கூலி அதிகாரப்பூர்வ வசூல்: சன் பிக்சர்ஸ் தற்போது கூலி படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கூட முதல் நாளில் 100 கோடி வசூலை எட்டாத நிலையில், கூலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் உலகளவில் 151 கோடி என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் ரஜினிகாந்த் தனது உச்சத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
லியோ வசூல் முறியடிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 148 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் உலகளவில் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த வசூல் சாதனையை கோட் திரைப்படம் கூட முதல் நாளில் முறியடிக்க முடியவில்லை. 120 கோடி அளவில் தான் வசூல் வந்தது. இந்நிலையில், லியோவின் 148 கோடி சாதனையை கூலி திரைப்படம் முறியடித்து தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் படமாக மாறியிருக்கிறது.
75 வயதிலும் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயதிலும் தான் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா என்பதை நிரூபித்துள்ளார். கூலி திரைப்படம் எல்சியூ இல்லை என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. ரஜினிக்கான ஸ்டாண்ட் அலோன் படமாக உருவாக்கப்பட்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் அடிபொலி செய்துள்ளது. முதல் 4 நாட்கள் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் பட்சத்தில் 400 கோடி வசூலை முதல் வார முடிவில் இந்த படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது வாரமும் படம் இதே வேகத்தில் ஓடினால் 700 முதல் 800 கோடி வரை ஈட்டும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். 1000 கோடி வசூலை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். லியோ மற்றும் ஜெயிலர் வசூலை முந்தும் என தெரிகிறது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி லைஃப் டைம் வசூலை சுதந்திர தினமான இன்றே கூலி திரைப்படம் முறியடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











