ஆரம்பமே தகராறு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலிருந்து வெளியேறிய பிரபலம்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்திலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேறி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷை பிரிந்த பிறகு பயணி என்ற ஆல்பம் பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியிட்டு இருந்தார்.
தற்போது கிரிக்கெட் விளையாட்டை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு பூஜை போடப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து 3 படத்தை இயக்கி இருந்தார்.வித்தியாசமான காதல் கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. 3 படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியை வைத்து வைராஜா வை படத்தை வெளியிட்டு இருந்தார்.

லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் லால் சலாம் என்ற படத்தை இயக்க உள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படதில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த மாதம் ஷூட்டிங்
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். அண்மையில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

விலகிய முக்கிய பிரபலம்
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், பிரீ ப்ரொடெக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக படத்தில் வேலை செய்யப் போவதில்லை. எதிர்காலத்தில் அனைத்து போஸ்டர்களில் இருந்தும் எனது பெயரை நீக்குமாறு லைக்கா நிறுவனம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.படம் ஆரம்பிக்கும் போதே இவ்வாறு பிரச்சனை எழுந்துள்ளது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











