சிரஞ்சீவி குறித்து அவதூறு பேச்சு... ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினருக்கு ஓராண்டு சிறை!
சென்னை: மெகா ஸ்டார் சிரஞ்சீவி குறித்து அவதூறு பேசிய வழக்கில், நட்சத்திர தம்பதிகளான ராஜசேகர் மற்றும் ஜீவிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் ராஜசேகர். புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் அப்போது பிரபல நடிகையாக இருந்த ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர். ஷிவாத்மிகா தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி குறித்து அவதூறு பேச்சு: கடந்த 2011ஆம் ஆண்டு ராஜசேகர் மற்றும் ஜீவிதா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தனர். அதாவது, சிரஞ்சீவியின் ரத்த வங்கி என்ற பெயரில் ரத்தத்தை சேமித்து வைத்து அதை பிளாக் மார்கெட்டில் ஒரு யூனிட் ரத்தம் ரூ.850 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இது தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிரடியான தீர்ப்பு: இதை எதிர்த்து சிரஞ்சீவியின் மச்சானும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராஜசேகர் மற்றும் ஜீவிதா இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று அதிரடியான தீர்ப்பளித்தார்.
ஓராண்டு சிறை: அதில்,நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியருக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் சிரஞ்சீவி குறித்து அவதூறு பரப்பியதற்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து பரபரப்பான தீர்ப்பளித்தார். இதையடுத்து, தம்பதியினர் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்ததை அடுத்து, அபராதத் தொகை கட்டிய அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் இருந்த பிரச்சனை: தெலுங்கு திரையுலகில் தொடக்கத்தில் இருந்தே ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினருக்கும் சிரஞ்சீவிக்கும் ஒத்துவராது என்று கூறப்படுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் சங்க விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, ராஜசேகர் அவரை பேசவிடாமல் தடுத்து, அனுமதி இன்றி மேடையேறி, தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நரேஷ் குறித்து பல மோசமான கருத்துக்களை கூறியிருந்தார். இதை சிரஞ்சீவி வன்மையாக கண்டித்ததால் அப்போதில் இருந்தே இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











