வராஹ ரூபம்.. காந்தாரா பாடல் மலையாள காப்பி? தியேட்டர், ஓடிடியில் பாடலை நீக்க நீதிமன்றம் உத்தரவு
கோழிக்கோடு: கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
காந்தாரா படத்தில் இடம்பெற்ற 'வராஹ ரூபம்' பாடல் காப்பியடிக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் அளித்த புகாரில், நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.

சூப்பர் ஹிட் அடித்த காந்தாரா
கே ஜி எஃப். படத்தை தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'காந்தாரா' வசூலில் சாதனை செய்து வருகிறது. ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் இசையமைத்துள்ளார். காந்தாரா படத்தின் ஹீரோவான ரிஷப் ஷெட்டி தான் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள காந்தாரா, இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

வராஹ ரூபம் பாடல் சர்ச்சை
காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மெய்சிலிர்க்க வைத்ததாக பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். குறிப்பாக, க்ளைமேக்ஸில் வரும் 'வராஹ ரூபம்' என்ற பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இசை, கிரியேட்டிவிட்டி, மேக்கிங் என இந்தப் பாடல் தான், காந்தாராவின் உயிர்நாடி எனலாம். இந்நிலையில் இந்த பாடல் திருடப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு 2015ம் ஆண்டு வெளியிட்ட நவரசம் பாடலின் காப்பி தான் வராஹ ரூபம் பாடல் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து காந்தாரா படக்குழுவினருக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

நீதிமன்றம் சென்ற தாய்க்குடம் பிரிட்ஜ்
காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள 'வராஹ ரூபம்' பாடல் தட்சிண பூத ஆராதனையின் நம்பிக்கைகள், வழிபாடுகளை சித்தரிப்புகளை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில், தாய்க்குடம் பிரிட்ஜ் வெளியிட்ட நவரசம், வராஹ ரூபம் இரண்டு பாடல்களுக்கும் இடையே அதிகமான ஒற்றுமைகள் உள்ளன. எங்களின் அனுமதி இல்லாமல் நவரசம் பாடலை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் என கோழிக்கோடு நீதிமன்றத்தில் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இதுகுறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

வராஹ ரூபம் பாடலுக்கு தடைவிதிப்பு
தாய்க்குடம் பிரிட்ஜ் எந்த வகையிலும் காந்தாரா உடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற நிலையில், இது அப்பட்டமான வரம்பு மீறல் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினரின் அனுமதியில்லாமல் இனி வராஹ ரூபம் பாடலை காந்தாரா படத்தில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது. திரையரங்குகள், ஓடிடி, யூடியூப் உட்பட அனைத்து தளங்களிலும் காந்தாராவின் வராஹ ரூபம் பாடல் இடம்பெறக்கூடாது எனவும் மிக கண்டிப்பாக நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ரசிகர்கள், காந்தாரா படத்தின் ஜீவனே வராஹ ரூபம் பாடல் எனவும், அது இல்லாமல் அந்தப் படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், காந்தாரா படக்குழுவினர் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினரை சந்தித்து வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த அனுமதி கேட்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











