சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வழக்கு...கோர்ட் என்ன சொல்லிருக்கு தெரியுமா ?
சென்னை : சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை கண்காணிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 ம் ஆண்டு துவங்கப்பட்ட சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் 'வசந்தம் அணி' என்கிற பெயரில் ஓர் அணியும், நடிகர் ரவிவர்மா தலைமையில் 'உழைக்கும் கரங்கள்' என்ற பெயரில் ஓர் அணியும், 'புதிய வசந்தம்' என்ற பெயரில் நடிகர் ஆதித்யா என்.எஸ்.செல்வம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தல் நடத்த அனுமதி மறுப்பு
ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த மூன்று அணிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலை ஜனவரி 20 ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் தேர்தலை நடத்த போலீஸ் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. மாநகராட்சியின் ஒப்புதலை பெற்ற பிறகு தேர்தலை நடத்த அனுமதி அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

கோர்ட்டில் மனுத்தாக்கல்
இதுதொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதிய நிர்வாகிகளை தேர்ந்ததெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால் ஜனவரி 20ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழங்க கோரிக்கை
தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை சென்னை மாநகர காவல்துறை நிராகரித்ததாகவும், எனவே உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கும், தேர்தலை நடத்த அனுமதி வழங்குமாறு சுகாதார துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிடுமாறும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த தயார்
மேலும் தேர்தலை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பார்வையாளரை நியமிக்க தொழிலாளர் நலத்துறைக்கும் உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், அனுமதி வழங்கினால் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கோர்ட் போட்ட உத்தரவு
இதனையடுத்து காவல்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications











