ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு

நடிகை ரம்பாவுக்கும் பெரும் தொழிலதிபர் இந்திரனுக்கும் நாளை திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இந்த நேரம் பார்த்து ரம்பாவின் தாயார் மீது செக் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான சங்கரநாயகம் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ரம்பா, அவரது தந்தை வெங்கடேஸ்வர ராவ், தாயார் உஷா ராணி, சகோதரர் சீனிவாஸ் ஆகியோருக்கு 20 லட்சம் கடன் வாங்கினர்.
த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்புக்காக இந்தப் பணம் வாங்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 4 வாரத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்து, நடிகை ரம்பாவும் பல செக் மோசடி வழக்குகளில் சிக்கிக் கொண்டார்.
ரெங்கநாயகி பிலிம்ஸுக்கு ரூ 7 லட்சத்துக்கு வெங்கடேஸ்வர ராவ் ஒரு செக் தந்துள்ளார். ஆனால், அதை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் சரவணன் வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து ரம்பா குடும்பத்தினருக்கு ரெங்கநாயகி பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
எனவே மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அனைத்து செக் மோசடி வழக்குகளிலிருந்தும் தான் விடுபட்டு நிம்மதியாக திருமண வாழ்க்கையில் செட்டிலாகப் போவதாக ரம்பா அறிவித்த நிலையில், மதுரை நீதிமன்றம் ரம்பாவின் தாயாரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை ரம்பாவின் திருமணம் நடக்க உள்ளதால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











