ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்.. தீர்ந்தது சென்சார் பிரச்னை.. விஜய்க்கு நிம்மதி.. படம் எப்போ ரிலீஸ்?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி (இன்று) வெளியாவதாக இருந்தது. படக்குழு அதற்கான அத்தனை வேலைகளையும் முடுக்கிவிட்டிருந்த சூழலில்; சென்சார் அதிகாரிகளோ சான்றிதழ் தரவே இல்லை. இதனால் அப்செட்டான தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பினை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.
தவெக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு தமிழ் திரைத்துறைக்கு குட் பை சொல்கிறார். இதனால் அவரது கடைசி படமாக ஜனநாயகன் கருதப்படுகிறது. எனவே அந்தப் படத்தை கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ரசிகர்கள் செய்துவிட்டார்கள். ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகும் என தேதியை லாக் செய்துவிட்டு; அதற்கான வேலைகளிலும் தயாரிப்பு தரப்பான கேவிஎன் நிறுவனம் இறங்கியிருந்தது.

சென்சார் அதிகாரிகள் வைத்த செக்: ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்; சில இடங்களில் மாற்றங்களை சொன்னார்கள். அதையும் செய்து மறு ஆய்வு கமிட்டிக்கு படம் சென்றது. அங்கும் பார்த்துவிட்டு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். இதன் காரணமாக கொதிப்படைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கடந்த ஆறாம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கை அடுத்த நாளைக்கு ஒத்தி வைத்தது.
இன்றைக்கு தீர்ப்பு: அதனையடுத்து நேற்று முன்தினமும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இப்படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளதாகவும், படத்தில் சில இடங்களில் ஆபத்தான காட்சிகளை வைத்திருக்கிறார்கள் என மத்திய தாணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கேவிஎன் நிறுவனம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு ஒன்பதாம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு: இந்நிலையில் அறிவித்தபடி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில், விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும் யு/ஏ சான்றிதழை இன்றே வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் ரத்து செய்திருக்கிறது.
முன்னதாக, வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளிப்போனதால் படத்தின் ரிலீஸ் ஜனவரி ஒன்பதாம் தேதியிலிருந்து தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக ஜனவரி இரண்டாவது வாரத்தில் (12லிருந்து 14க்குள்) படம் வெளியாகலாம் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம் இன்றே சான்றிதழ் வழங்க கோர்ட் உத்தரவிட்டுவிட்டதால் நாளைக்குகூட பராசக்தியோடு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பின்னணி?: முன்னதாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் வருவதற்கு அதன் பின்னணியில் திமுகவும், பாஜகவும் இருக்கின்றன. அதனால்தான் இவ்வளவு நடக்கிறது என அவர்களை காரணம் காட்டினார்கள் தளபதி ரசிகர்கள். அதற்கு இரண்டு கட்சியினருமே இல்லை என்ற பதிலையே கொடுத்துவருகிறார்கள். எனவே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள் என்று சோஷியல் மீடியாவில் இருந்த நிலைமை இப்போது திமுகவினர் Vs விஜய் ரசிகர்கள் மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











