‘வேலை முடிஞ்சா கிளம்பிட வேண்டியது தான்’... தன் மரணம் பற்றி காலையிலேயே தம்பியிடம் சொன்ன கிரேஸி மோகன்!
பிரபல எழுத்தாளர் கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார்.
Recommended Video
சென்னை: இன்று காலை தன் தம்பியிடம் எதேச்சையாக மரணம் பற்றி பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அது நிஜமாகி விட்டது சோகமான செய்தி.
தமிழ்க் கலையுலகில் சினிமா, நாடகம், தொலைக்காட்சித் தொடர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் கிரேஸி மோகன். 66 வயதான அவர், இன்று மதியம் நெஞ்சுவலி காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார்.

அவரது இந்த திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கிரேஸி மோகன் தன் தம்பி பாலாஜியிடம் மரணம் பற்றி பேசியது எஸ்.வி.சேகர் மூலம் தெரியவந்துள்ளது. அப்போது, 'பாரதியார், விவேகானந்தர் இவங்க எல்லாம் குறைந்த வயசுலேயே செத்துப் போய்ட்டாங்கல்ல.. வந்த வேலை முடிஞ்சுடுச்சுன்னா போக வேண்டியது தான். வயசு எல்லாம் பார்க்க முடியுமா?' என கிரேஸி மோகன் கூறியதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
அப்போது ஏதோ மனதில் பட்டதால் யதார்த்தமாக இப்படிப் பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
இன்னும் சில காலம் இருந்து மக்களை சிரிக்க வைத்திருக்கலாமே என கிரேஸியின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது நண்பர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால், கிரேஸி மோகன் தன் வேலை முடிந்து விட்டதாக நினைத்து விட்டார் போலும். அதனால் தான், அவர் விட்டுச் சென்ற வசனங்கள் காலம் தோறும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில், அவர் கிளம்பி விட்டார்.


Click it and Unblock the Notifications











