Leo - லியோவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம்.. லிஸ்ட் பெருசா போகுதே
சென்னை: Leo (லியோ) லியோவில் பிரபலங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்ல இப்போது இன்னொரு பிரபலம் படத்தில் இணைந்திருக்கிறார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வாரிசுக்கு முன்னதாக வெளியான பீஸ்ட் படமும் தோல்வியடைந்தால் விஜய்யின் கிராஃபில் கடைசி இரண்டு படங்களில் ஒன்று தோல்வி, மற்றொன்று சுமார் என சேர்ந்திருக்கிறது. எனவே அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கேற்றபடி விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார்.

லியோ ப்ளடி ஸ்வீட்: லியோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இதன் டைட்டில் டீசர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்திருக்கிறார். காஷ்மீரில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்தது.
சென்னையில் பரபர ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு. முதலில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த ஷூட்டிங் அடுத்ததாக பையனூரில் நடந்தது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்கும் இடையேயான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதில் அர்ஜுன், விஜய், மன்சூர் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

பிரமாண்டமான பாடல்: மேலும் படத்தில் ஒரு பாடலுக்காக 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார். அதேபோல், படத்தில் சிங்கத்திற்கு முக்கியமான ரோல் ஒன்று இருக்கிறது. எனவே அதனை உருவாக்க சிஜிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்யவிருப்பதாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது. லியோவின் கதை பாட்ஷாவின் கதை போல்தான் இருக்கும் என்றும், படத்தில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்றும் கூறப்படுகிறது.
லியோவில் இணைந்த பிரபலம்: இந்தப் படத்தை மெகா ப்ளாக்பஸ்டராக கொடுத்துவிட வேண்டும் என்பதில் லோகேஷ் கனகராஜ் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார். இதன் பல விஷயங்களை நிதானமாக செய்கிறார். அந்தவகையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ப்ரதீப் முத்து இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது ட்விட்டர் பயோவில் இதுவரை தான் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களுடன் லியோ படத்தையும் இணைத்திருக்கிறார். இதன் காரணமாக அவர் லியோவில் நடிக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

ஷூட்டிங் எப்போது நிறைவு?: லியோ படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். ஷூட்டிங்கை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்கும் விஜய் ஜூலை மாதத்தில் படத்துக்கான டப்பிங்கை பேசவிருக்கிறார் என கூறப்படுகிறது. லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











