நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... நடிகர் திலீப் வீட்டில் அதிரடி ரெய்டு!
சென்னை : நடிகையை மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.
திலீப், அவரின் சகோதரர் அனூப் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திலீப் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 14 தேதி விசாரணைக்கு வர உள்ளது.

பெரும் அதிர்வலைகள்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை செய்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

திலீப்பிடம் வீடியோ
கைது செய்யப்பட்ட திலீப் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். நடிகர் திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திரகுமார் புதிய குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில், நடிகை மானபங்க வீடியோவை திலீப் வி.ஐ.பிக்களுக்கு போட்டு காட்டியதாக கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோ திலீப் வசம் இருப்பதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார்.

அதிரடி ரெய்டு
இயக்குனர் அளித்த புகாரின் பேரில் 20 பேர் கொண்ட போலீசார், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு நடந்து வருகிறார்கள். கடந்த வாரம், திலீப் மற்றும் அவரது ஆட்கள் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அவர்களுக்கு எதிராக புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திலீப் முதல் குற்றவாளி
திலீப் முதல் குற்றவாளியாகவும், அவரது சகோதரர் அனூப், மைத்துனர் சூரஜ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாகவும் உள்ளனர். திலீப் மற்றும் அவரது ஆட்கள் மீது சதி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்ஜாமீன்
நடிகர் திலீப்பின் சகோதரர் அனூப் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதிய குழு விசாரணை அறிக்கையை ஜனவரி 20-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில், திலீப் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளார், இது ஜனவரி 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











