Robo Shankar Wife: இறுதிச் சடங்கில் ஆடியது குத்தமா? இந்த ஊர்ல நிம்மதியா ஒருத்தர வழியனுப்ப கூட முடியாது போலயே?
சென்னை: ரோபோ சங்கர் மறைவு ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும், சின்னத்திரையினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி பேதமின்றி அவரது உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா ஆட்டம் ஆடி அவருக்கு வழி அனுப்பி வைத்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கும்போது பிரியங்கா நடனமாடியதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது ரோபோவின் மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறும் காரணம் அவரது மது போதைப் பழக்கம் தான். இப்படி இருக்கும்போது, மனைவி பிரியங்காவின் நடனத்தை இணைய வாசி ஒருவர், " குடிகாரன் ஒழிந்தான் என்று சந்தோஷத்தில் மனைவி ஆடுகிறாள் போதும் சகிக்கவில்லை" என்று மோசமாக விமர்சித்துள்ளார். இன்னும் சிலரோ, வீடு வரை மனைவி என்ற தமிழ் பாரம்பரியமே கெட்டுவிட்டது என்று முட்டாள்தனமாக பழைய பழக்கவழக்கங்களைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரோ, புருஷன் இறந்துட்டான்னு பிரியங்காவுக்கு கவலையே இல்லை போல அதனால்தான் இந்த ஆட்டம் போட்டுட்டு இருக்காங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதுபோன்ற பதிவுகளை இணையத்தில் பார்க்கும் போது இந்த தமிழ் சமூகம் ஏன் இவ்வளவு எதிர்மறையான எண்ணங்களோடு இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முதலில் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் ஆடுவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு இல்லை. மாறாக அது துக்கத்தின் வெளிப்பாடுதான் என்பதை ஏன் உணர மாட்டேன் என்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
அறிவிலித்தனம்: ரோபோவுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான உரையாடலில் நான் முன்னர் இறந்து விட்டால் எனது இறுதி ஊர்வலத்தில் நீ ஆட வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் இருந்திருக்கலாம். நண்பர்களுக்கு இடையிலேயே அப்படியான உரையாடல்கள் இருக்கும் போது, கணவன் மனைவிக்கு மத்தியில் அப்படியான உரையாடல்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது தானே. பிரியங்கா ஆடியதை கேள்விக்கு உள்ளாக்கும் நபர்கள் ஏன், மரணத்தின்போது ஒப்பாரி பாடல்கள், கானா பாடல்கள் போன்றவை பாடப்படுகிறது என்று கேள்வி எழுப்புவதில்லை. காரணம் அவை துக்கத்தை பிரதிபலிக்கிறது, மாண்டவரின் புகழைப் பாடுகிறது என்பதுதானே. அனைத்து வகையான கலைகளுக்கும் அனைத்து வகையான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மை உண்டு.

பெண்களை ஒடுக்கும் எண்ணம்: இப்படியான அவற்றில் இருந்து பிரிந்து நின்று கொண்டு, அல்லது அது குறித்து தெரிந்து கொள்ளாமல், அதனை மோசமாக விமர்சிப்பது என்பது அறிவிலித்தனம். உதாரணத்திற்கு மனைவி இறந்து, மனைவியின் இறுதிச் சடங்கில் கணவன் ஆடியிருந்தால் இந்த பொதுச் சமூகம் கேள்வி கேட்டு இருக்காது. ஆனால் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ஆடியதும், அவரை மோசமாக விமர்சிக்கிறார்கள். இப்படி விமர்சிப்பவர்களுக்கு ஒரு ஆண் ஆடினால் விமர்சிக்க மாட்டார்கள், அது அவர்களுக்கு ஒரு பிரச்னை கிடையாது, அதுவே ஒரு பெண் ஆடினால், கலாச்சாரம், பண்பாடு என்ற ஸ்டீரியோடைப் எண்ணங்களை தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள். இவர்களின் நோக்கம் கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டு பெண்களை முடக்குவதும், அவர்களை எப்போதும் ஆண்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தான். உங்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து திருந்துங்க.


Click it and Unblock the Notifications











