பணத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. விசாரணை வளையத்திற்குள் தமன்னா காஜல் அகர்வால்.. புது கூத்து!
புதுச்சேரி: படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல பொருட்களை விளம்பரம் செய்வது, பல நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்து கொள்வது, நிறுவனங்களின் சிறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என சினிமா பிரபலங்கள் பலரும் அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த நிறுவனங்களால், மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அல்லது அந்த நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்துவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நிறுவனங்களின் மீது எந்த அளவிற்கு மக்களின் கோபம் இருக்குமோ, அதே அளவிற்கு சினிமா பிரபலங்களின் மீதும் இருக்கும். அப்படியான ஒரு சிக்கலில்தான் தமன்னாவும் காஜல் அகர்வாலும் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.
அதாவது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் சக்கை லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி, புதுச்சேரியில் மட்டும் 10 பேரிடம் சுமார் ரூபாய் 2 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அசோகன் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அளித்த புகார் இப்போது தமன்னாவையும் காஜல் அகர்வாலையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

காஜல் அகர்வால்: கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த மோசடி நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களுக்கு பரிசுப் பொருட்களாக கார்கள் வழங்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு அவர்கள் முதலீடு செய்த தொகையை பொருத்து, ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் ஒரு கோடி வரை மதிப்புள்ள கார்கள் பரிசாக கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார்.
மோசடி: அதன் பின்னர் மும்பையில் பிரமாண்டமான கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தினர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்காகவும் தனி வசூல் செய்துள்ளது அந்த மோசடி கும்பல். இவர்கள் மீது நாடு முழுவதும் அதாவது டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, கோவை, பெங்களூரு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, திருப்பூர், விழுப்புரம் என பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல், மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி, இணைய வழியே பணத்தை திருடும் கும்பலுக்கு கொடுத்தும் உதவியுள்ளார்கள், என்பதும் இதுவரை நடைபெற்ற விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை: இந்த வழக்கில் இதுவரை மோசடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இம்ரான் பாஷா, நித்தீஷ் ஜெயின் மற்றும் அரவிந்த் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசாரணையின் ஒரு பகுதியாக தனிப்படை போலீசார் நடிகைகள் தமன்னாவிடமும் காஜல் அகர்வாலிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள். மோசடி நிறுவனம் நடத்திய விழாக்களில் அவர்கள் பங்கு பெற்றதால் அவர்களும் பங்குதாரர்களாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணையை தனிப்படை போலீசார் நடத்தவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











