D.Imman - வில்லன் யாருனு எனக்கு தெரியும்.. பிள்ளைகள் கேட்கும்போது அனைத்தையும் சொல்வேன்.. இமான் ஓபன் டாக்
சென்னை: Sivakarthikeyan - D.Imman Controversy (சிவகார்த்திகேயன் - டி.இமான் சர்ச்சை) வில்லன் யார் என்று தனக்கு தெரியும் என்றும் தன்னுடைய பிள்ளைகள் கேட்கும்போது அனைத்தையும் சொல்வேன் என்றும் இமான் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இசையமைப்பாளர் இமான் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். அதாவது, "சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அந்தத் துரோகத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது இந்த ஜென்மத்தில் நடக்காது. அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் இருந்தால் மீண்டும் இணையலாம்.

குழந்தைகள் எதிர்காலம்: அவரிடம் ஏன் எனக்கு துரோகம் செய்தீர்கள் என்று என் பங்குக்கு நான் கேட்டுவிட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை பொதுவெளியில் சொல்ல முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக நான் சில விஷயங்களை மறைக்கிறேன்" என கூறினார். அவரது இந்தப் பேட்டி தமிழ் திரையுலகில் புயலை கிளப்பியது.
விவாகரத்துக்கு காரணமா?: அவரது இந்தப் பேட்டியை அடுத்து சிவகார்த்திகேயன் இமானுக்கு என்ன துரோகம் செய்திருப்பார் என்று பலரும் யூகிக்க ஆரம்பித்தனர். மேலும் இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் பேசினர். இது மேற்கொண்டு இந்த விவகாரத்தில் தீயை பற்ற வைத்தது.
மோனிகா விளக்கம்: இப்படிப்பட்ட சூழலில் இமானின் முதல் மனைவி மோனிகா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கும் இமானுக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று பஞ்சாயத்து செய்தார் சிவகார்த்திகேயன். ஒருகட்டத்தில் இமானின் விவாகரத்து முடிவுக்கு அவர் சப்போர்ட் செய்யாமல் நியாயத்தின் பக்கம் நின்றார். தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் வெளியில் இதை வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள்" என கூறியிருந்தார்.
இமான் பேட்டியின் அடுத்த பாகம்: இந்நிலையில் இமான் அளித்த பேட்டியின் அடுத்த பாகமும் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் அவர், "வில்லன் யார் என்று எனக்கு தெரியும். அதனால் நான் எனக்கு ஏன் இப்படி நடந்துவிட்டது என்று கடவுளிடம் முறையிடமாட்டேன். நான் கருணையின் அடிப்படையில் வாழ்பவன். என்னுடைய இரண்டு மகள்களையும் நான் சென்று பார்த்துதான் வருகிறேன். ஆனால் முன்னர் மாதிரி அவர்கள் என்னிடம் ஒட்ட மறுக்கிறார்கள்.
அனைத்தையும் சொல்வேன்: அவர்கள் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து என்னிடம் வந்து, அப்பா என்னதான் ஆச்சு என்று கேட்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது அவர்களிடம் சொல்வதற்கான அனைத்து விஷயங்களும் என்னிடம் இருக்கிறது. எனது முதல் திருமணம் எனது அப்பா, அம்மா பார்த்து நடத்தி வைத்த திருமணம்தான். அது இப்படி முடிந்ததில் அவர்களுக்கும் வருத்தம்.
கள்ள உறவில் இல்லை: நான் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணும் ஏதோ கள்ள உறவில் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தத் திருமணமும் எனது அப்பா அம்மா பார்த்து வைத்த திருமணம்தான். இன்னும் சொல்லப்போனால் குட்டி பத்மினியும், நடிகை சங்கீதா க்ரிஷ்ஷும்தான் எனக்கு இந்தப் பெண்ணை பார்த்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











