A.R.Rahman - டி.இமான் - சிவகார்த்திகேயன் சர்ச்சை.. ஏ.ஆர்.ரஹ்மான் ரியாக்ஷன் இதுதானா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வைத்தார். அதனையடுத்து அந்த விவகாரம் பெரும் விவாதம் ஆனது. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மௌனம் கலைக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் ரொம்பவே கஷ்டப்பட்டு இப்போது டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். முக்கியமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்த டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடித்த டான் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அவருக்கான கிரேஸ் ரசிகர்களிடம் எகிறியது.

மாவீரன்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை எடுத்த சூழலில் அடுத்ததாக வந்த பிரின்ஸ் படம் தோல்வியடைந்தது. அடுத்ததாக வெளியான மாவீரன் படம் ஹிட்டடித்தது. தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் அயலான் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இமான் குற்றச்சாட்டு: இப்படி படு பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் மீது இமான் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், "சிவகார்த்திகேயனுடன் இனி இணைந்து பணியாற்றமாட்டேன். அவர் எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
என்ன பிரச்னை: இமான் அவ்வாறு கூறியதை அடுத்து என்ன பிரச்னையாக இருக்கும் என பலரும் தோண்ட ஆரம்பித்தனர். ஒருதரப்பினர், இமானும் அவரது முதல் மனைவி மோனிகாவும் பிரிந்ததற்கு சிவகார்த்திகேயனே காரணம் என பேச ஆரம்பித்தனர். ஆனால் அதனை மோனிகா மறுத்தார். மேலும் இந்த விஷயத்தை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் விளக்கம் அளிக்கவும் செய்தார்.
சிவகார்த்திகேயனின் அமைதி: இந்த விவகாரம் பூதாகரமான பிறகு சிவகார்த்திகேயன் மௌனம் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவரது வேலையில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். இருந்தாலும் சிவா அமைதியாக இருக்கக்கூடாது; இந்த விவகாரத்தில் அவர் மௌனம் கலைத்து அவரது தரப்பிலிருந்து விளக்கத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன.
பிஸ்மி பேட்டி: இந்த சூழலில் பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவரிடம் அயலான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டை இமான் முன்வைத்தபோது அயலான் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. எனவே ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
ரஹ்மானின் ரியாக்ஷன்: அதற்கு பதிலளித்த பிஸ்மி, "இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எதுவும் பேசியிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவரது ஸ்டூடியோவில் சிவகார்த்திகேயன் இருக்கும்படி ஒரு ஃபோட்டோ பார்த்தேன். எனவே அப்போது அவரிடம் இதெல்லாம் உண்மையா என்று கேட்டிருக்கலாம். அதற்கு சிவகார்த்திகேயனோ வழக்கம்போல், இல்லை சார் இது பொய். திட்டமிட்டே பேசுகிறார்கள் என சொல்லியிருக்கலாம்.
இப்போ ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விப்பட்ட செய்தியை நம்புவாரா இல்லை சிவகார்த்திகேயன் சொல்வதை நம்புவாரா? சிவகார்த்திகேயன் சொல்வதைத்தான் நம்புவார். பாடகி ஒருவர் வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டை நம்பி தனது இசையில் வைரமுத்துவை பாடல் எழுதவிடாதவர் ரஹ்மான். அப்படிப்பட்டவர் சிவகார்த்திகேயன் - இமான் விவகாரத்திலும் தீர விசாரித்து வைரமுத்து விவகாரத்தில் எப்படி நடந்தாரோ அப்படித்தானே நடந்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சரியாக முடிவு எடுக்கவில்லை என்றுதான் சொல்வேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











