ஆடுகளம் படத்தில் அந்த மெயின் ரோலில் டேனியல் பாலாஜி நடிக்க வேண்டியதா?.. அவர் மறுக்க காரணம் என்ன?
சென்னை: 1975ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் பிறந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கே அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை. டேனியல் பாலாஜியின் மறைவு சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நம்பியார் போலவே வில்லனாக இருந்தாலும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் டேனியல் பாலாஜி. திருமணம் கூட செய்துக் கொள்ளாமல் தனது தாயாருக்காக கோயில் எல்லாம் கட்டி பார்த்துக் கொண்டிருந்த டேனியல் பாலாஜி இயக்குநராக நினைத்து கடைசி வரை அவரது அந்த ஆசை நிறைவேறவில்லை.

ஆனால், வெற்றிமாறனுக்கு பல படங்களில் அவரது டைரக்டர் அறிவு ரொம்பவே பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே ஆடுகளம் படத்தில் அந்த பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க டேனியல் பாலாஜியை அழைத்தும் வெற்றிமாறனுக்கு 'நோ' சொல்லியிருக்கிறார் டேனியல் பாலாஜி.
டேனியல் பெயர் ஏன்?: டி.சி. பாலாஜி ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்து வந்த போது டேனியல் என்கிற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார். அதன் பின்னர் டேனியல் பாலாஜி என்றே சினிமாவில் அறியப்படுகிறார். டேனியல் பாலாஜி கிறிஸ்துவர் அல்ல, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் தான். ஆனால், சாதி, மத பாகுபாடு இன்றி வளர்ந்த நிலையில், டேனியல் என்கிற பெயர் தனது பெயருடன் ஒட்டிக்கொண்டது என டேனியல் பெயருக்கான விளக்கத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் படங்களில்: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன் படத்தில் நடிகர் கிஷோரின் தம்பியாக ரவி எனும் கதாபாத்திரத்தில் வடசென்னை இளைஞராக நடித்து மிரட்டியிருப்பார். எதுக்குமே உதாவாதவன் என கிஷோர் நினைத்துக் கொண்டிருக்க, ஆர்வக்கோளாறு காரணமாக அண்ணனையே போட்டுத் தள்ளி விட்டு அவனது இடத்தை பிடிக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். வடசென்னை படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து ஆடுகளம் படத்திலும் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பியிருக்கிறார்.
பேட்டைக்காரன் கதாபாத்திரம்: பொல்லாதவன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். பொல்லாதவன் கிஷோர் இந்த படத்திலும் நடித்த நிலையில், டேனியல் பாலாஜியை பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்தி பார்க்கமுடியவில்லை வெற்றி, அதில், ஒரு வயதானவர் நடித்தால் தான் நல்லா இருக்கும். நான் நடிச்சா படத்தையே கெடுத்துவிடுவேன் எனக் கூறி அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டேன். வெற்றி கேட்டு நான் சொன்ன ஒரே 'நோ' அந்த படத்திற்கு மட்டும் தான் என த்ரோபேக் பேட்டியில் டேனியல் பாலாஜி பேசியுள்ளார்.

டைரக்டர் மைண்ட்: டேனியல் பாலாஜிக்குள் இருந்த இயக்குநர் அறிவு தான் அந்த படத்தில் அவர் நடிக்காமல் தவிர்த்தது என்கின்றனர். அவருக்கு பதிலாக பேட்டைக்காரன் படத்தில் நடிகர் ஜெயபாலன் நடித்திருப்பார். அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வடசென்னை படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி விடுதலை படத்திலும் வெற்றிமாறனுக்கு பல உதவிகளை படப்பிடிப்பு தளத்தில் செய்துக் கொடுத்திருக்கிரார்.
வெற்றிமாறன் அஞ்சலி: தனது நெருங்கிய நண்பரான டேனியல் பாலாஜி மறைவை அறிந்ததும் வெற்றிமாறன் புரசைவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திச் சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











