பிணத்திற்கு மேக்கப் போட்டேன்.. டேனியல் பாலாஜிக்கு இப்படி ஒரு திறமையா? கண் கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், டேனியல் பாலாஜியின் திறமையை நினைத்து, அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.
நடிகர் டேனியல் பாலாஜி ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்தத்தை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் டேனியல் பாலாஜியாக பிரபலம் ஆனார். சித்தி தொடரைத் தொடர்ந்து அலைகள் தொடரில் நடித்தார். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன் படத்தில் நடித்த டேனியல்பாலாஜி கௌதம்மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

டேனியல் பாலாஜி: இந்த படத்தைத் தொடர்ந்து, வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து பொல்லாதவன், வட சென்னை, என்னை அறிந்தால், வை ராஜா வை, பைரவா,அச்சம் என்பது மடமையடா, பிகில் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சோகத்தில் ரசிகர்கள்: இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 48 வயதே ஆன டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனையடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் பலரும் டேனியல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு திறமையா: இந்நிலையில், டேனியல் பாலாஜி பேட்டி அளித்துள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, பிணத்திற்கு மேக்கப்போடுவதற்கு பல லட்சம் டாலர் கேட்டார்கள். இதற்காக கௌதம் மேனன் தயாரிப்பாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் படப்பிடிப்பு நடக்காமல் அனைவரும் இருந்தோம்.
வைரலாகும் வீடியோ: அப்போது தான் கௌதம் மேனனிடம் என்ன பிரச்சனை என்று கேட்டேன், அவர் சொன்னதும் இவ்வளவு தானா, எனக்கு 100 டாலர் கொடுங்க என்று கேட்டு அருகில் இருந்த கடைக்கு மேக்கப்போட தேவையான பொருட்களை வாங்கி பிணத்திற்கு நானே மேக்கப் போட்டேன். படத்தில் அந்த காட்சி நன்றாக வந்திருந்தது. அசுரன் படத்தில் வரும் ஒரு பிண காட்சிக்கும் மேக்கப் போட்டது நான் தான். அதே போல, பொல்லாதவன், ஆடுகளம் என பல திரைப்படங்களுக்கு நான் மேக்கப்போட்டு இருக்கிறேன் என்று பேசி உள்ளார். அந்த வீடியோவை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











