twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தர்பார்.. படம் முடிந்தபோது.. நண்பர் கேட்டார்.. உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா?

    |

    சென்னை: தர்பார் படம் குறித்து நமது வாசகர் நெல்சன் என்பவர் எழுதி அனுப்பியுள்ள விமர்சனம். அவரது நடையிலேயே...

    தர்பார் எனும் இந்தி டப்பிங் திரைப்படத்தை முதல் நாளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதொன்றும் புதிதல்ல. ஏதோ விமர்சனம் எழுதுவதற்காக அலாரம் வைத்து எழுந்து போய் படம் பார்க்கும் இந்த டிஜிடல் தலைமுறை மனிதன் அல்ல நான். ரத்தமும் சதையும் போல‌ உள்ளுக்குள் ரஜினியிசமும் ஊறிப் போன அக்மார்க் ரஜினி ரசிகன். அவர் தொடங்கியும் தொடங்காமலும் இருக்கின்ற அரசியலோ, பேசியும் பேசாமலும் இருக்கின்ற சமூக சிந்தனைகளோ இந்த விமர்சனத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது முன் குறிப்பு.

    darbar a fans review about the movie

    மும்பையில் இருக்கின்ற அத்தனை தாதாக்களையும் உண்டு இல்லையென துவம்சம் செய்யும் ஒரு வெறிபிடித்த வேங்கையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை விட ஒரு அட்டகாசமான கதாபாத்திரம் ரஜினிக்கு யாரால் கொடுக்க முடியும். "அவரு யாரையோ தேடறாரு.. யாருன்னு தான் தெரியல" என ஆங்காங்கே பில்டப்கள் ஏற்றப்படுகின்றன. என்கவுண்டர்கள் என்ட்லெஸ் ஆகப் போனபோது வழக்கம் போல ஒரு பாப் கட்டிங் மனித உரிமை அதிகாரி வருகிறார். அவரையும் உருட்டி மிரட்டி அறிக்கையில் கையெழுத்து வாங்க வைக்கிறார். அதாவது ஆதித்ய அருணாச்சலம், ரஜினி.

    அதன் பிறகு மும்பை, நாசிக், கோவா என பல இடங்களில் போதை கும்பலையும், குழந்தை கடத்தும் கும்பலையும் கழுவி சுத்தம் செய்கிறார். அந்த களையெடுக்கும் படலத்தில் ஒரு முக்கியமான நபர் கொல்லப்படுகிறார். அந்த நபருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒருவர் குடுமியோடு வந்து தலைவரை அழிக்கப் பார்த்து, வேறு வழியில்லாமல் அழிந்து போகிறார். இப்படி ஒரு மாஸ் மசாலா படத்தில் மானே தேனே பொன்மானே என காதல், அப்பா மகள் சென்டிமென்ட், நகைச்சுவை என மேலாக்கில் தூவியிருக்கிறார்கள். இருந்தாலும் கடைசியில், "சாருக்கு ஒரு ஊத்தாப்பம்" என்று தான் பார்வையாளர்கள் காதில் கேட்கிறது.

    ரஜினியின் முகமும், பார்வையும், ஸ்டைலும், சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை மயிர்க்கூச்சரியச் செய்கின்றன. அதன்பின் அந்த மயிர் கூச்சரிய மறந்து தூங்கி விடுகிறது என்பது தான் சோகம். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைன்ட் என்பது போல, ரஜினி இப்படி முழுக்க முழுக்க அட்டகாசமான பங்களிப்பு செய்தும் படத்தில் ஒரு திருப்தி வரவில்லை என்பது தான் உண்மை.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதாவது வெந்து கொண்டிருக்கின்ற பானையிலிருந்து ஒரு அரிசியை எடுத்து சாப்பிட்டு பாத்து சோறு வெந்துதா, வேகலையா, வேகுமா என்பதையெல்லாம் கண்டுபிடிக்கும் பாட்டிகால வழிமுறை அது. இப்பல்லாம் குக்கர் விசிலடிக்காவிட்டால் நமக்கு சோறு வெந்துதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படியே இருக்கட்டும். சினிமாக்களைப் பொறுத்தவரையில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியை வைத்து அந்த படம் எப்படிப் போகும் என்பதைக் கணிக்கலாம்.

    darbar a fans review about the movie

    இந்தப் படத்தில் ஊரிலுள்ள அத்தனை வில்லன்களும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியோடு ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அங்கே ரஜினி வருவார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. வருகிறார். வானத்திலிருந்து வருகிறார், ஸ்டைலாக, ஸ்லோவாக‌. நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் அவரை நோக்கிச் சீறிப் பாய்ந்தாலும் அவரது ஸ்லோமோஷனை விட வேகமாக அவற்றால் பயணிக்க முடியவில்லை. தோற்றுப் போய் வேறெங்கோ முட்டி மோதி கீழே விழுந்து கதறி அழுகின்றன. இருநூறு கைத்துப்பாக்கிக்கு எதிராக மெஷின் கண்ணை எடுத்தால் அது ஹீரோ, அதுவே வெறும் வாளை எடுத்தால் மாஸ் ஹீரோ. ரஜினி வாளை எடுக்கிறார், எல்லாருடையை வயிற்றையும் கிழிக்கிறார். ஸ்டைலாக செயரில் உட்கார்ந்து சிரிக்கிறார். வில்லன்களெல்லாம் ஓரமாய், ஏகமாய்ப் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ரசிகர்களும் தான்.

    அப்படிப் பதம் பார்த்ததால் தான், படம் முழுவதும் நம்மைப் பதம் பார்க்கிறது திரைக்கதை. படத்தில் தொடக்கத்திலேயே மகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொன்னபிறகு, அந்த கதாபாத்திரத்தின் மீதான சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. அதனாலேயே ஜாலியான அப்பா மகள் காட்சியைக் கூட அனுதாபத்தோடு பார்க்கும் மனநிலை நமக்கு வந்து விடுகிறது.

    அதேபோல, வில்லன் யார் என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது, ஆனால் பாவம் ஆளானப்பட்ட ஆதித்ய அருணாச்சலத்துக்கு இந்த மேட்டரை யாரும் சொல்லவில்லை. அவர், 'யாரோ ஒருத்தர்' அவரு இப்படியா ? அப்படியா என்றெல்லாம் கேட்கும்போது தியேட்டரில் பலர் வெண்ணிற ஆடை மூர்த்தியாய் மாறி உதட்டை உருட்டியதைக் கேட்க முடிந்தது.

    நான் தலைமறைவா? அடப்பாவிகளா.. கோயிலுக்கு போயிருந்தேன்யா.. கிளப்பிவிட்டாய்ங்க.. பிரபல நடிகர் விளக்கம்!நான் தலைமறைவா? அடப்பாவிகளா.. கோயிலுக்கு போயிருந்தேன்யா.. கிளப்பிவிட்டாய்ங்க.. பிரபல நடிகர் விளக்கம்!

    நான் மும்பைக்கு போகணும்ன்னா மூணு கண்டிஷன் என அமர்க்களமாய் ஆரம்பிக்கிறார் ரஜினி. ஒன்று, வேலையை முடிக்காம பாதில‌ வரமாட்டேன். ரெண்டு, யாராய் இருந்தாலும் விடமாட்டேன். மூணு, தாடியை எடுக்கமாட்டேன். அப்படியே நான்காவதாக, "பேன்டை இன் பண்ண மாட்டேன்" என்றும் சொல்லியிருக்கலாம் என தொடர்ந்து வருகின்ற காட்சிகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியை வைத்துப் படமெடுப்பதற்கும், ரஜினி ரசிகர்களுக்காகப் படமெடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை பேட்டையும், தர்பாரும் நமக்குப் புரிய வைக்கின்றன.

    ஒரு கட்டத்தில் இது சிங்கம் 4 படமா ? இதை இயக்கியது ஹரியா எனும் சந்தேகமே வந்து விடுகிறது. சந்தேகம் வந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தப் படத்தில் வருவது போல சில காட்சிகளும் வந்து வியக்க வைக்கிறது. சந்தோஷ் சிவன் போன்ற ஜாம்பவான்களுக்கு இந்தப் படத்தில் வேலை குறைவு. குறைந்தபட்சம் புதுமையாய் எதையும் சிந்திக்க வேண்டிய வேலை சுத்தமாய் இல்லை.

    darbar a fans review about the movie

    பவர்புல் வில்லன் இல்லாத ரஜினி படம் என்றைக்குமே வியக்க வைக்காது. இந்தப் படத்திலும் வில்லன் பெரிய சைஸ் புஸ்வாணம். சுனில் ஷெட்டியைச் சுற்றி டான்கள் முதியோர்க் கல்வி ஸ்கூல் மாணவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் போல உணர்ச்சியற்ற முகபாவனையோடு மிரட்ட நினைக்கிறார் அவர். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படும் காட்சிகள் ஸ்பெஷல் வில்லனை சாதா வில்லனாக மாற்றித் துவைத்துக் காயப் போடுகிறது.

    வலியண்ணன் தோட்டத்து வேலியை, பெருச்சாளிகள் ஓட்டை போடுவது போல தேச எல்லையை கட்டிங் பிளேயர் வைத்து கட்பண்ணி இந்தியாவுக்குள் வருகிறார் வில்லன். டிரோன்களை வைத்து அட்சர சுத்தமாய் மனிதனை ஸ்கேன் பண்ணி சுடுகின்ற இந்த ஹைடெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காலத்தில், பட்டனை அமுக்கினா கத்தி விரியும் என ஒரு சிறுபிள்ளை விளையாட்டை நடத்துகிறார். அந்த கத்தியை ஒரு சோபாவில் குத்தி கிழித்து, செய்முறை விளக்கமும் சொல்கிறார். ஒரு பாழடைந்த பில்டிங்கில் போனதும், அட இங்கே செம பாதுகாப்பு என்கிறார். இவரையெல்லாம் எப்படி சர்வ தேசத்து போலீஸ்படையும் தேடித் தேடித் தோற்றுப் போச்சு என்பது ஹரிக்கே விளக்கம், சாரி முருகதாஸ் இல்ல ?

    கடைசிக் காட்சியில் வில்லன் தப்பித்துப் போகிறான். ஐயோ, எங்கே போனான்னு தெரியலையே என ஹீரோ டென்ஷன் ஆகிறார். அப்போ வில்லனே கூப்பிட்டு, தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்கிறார். ஹீரோ ஒண்டிக்கட்டை என்பதால், செத்துப் போன போலீஸ்காரங்க குடும்பங்களை பணையக் கைதிகளாய்ப் பிடித்து வைத்திருக்கிறார். அப்புறம் என்ன, நூறு இள வில்லன்களை கத்தியை வைத்தே வேட்டையாடிய‌ ரஜினி, இந்த சாதா வில்லனை ஒற்றைக்கு ஒற்றை வேட்டையாடுவது பெரிய விஷயமா என்ன ?

    ரஜினி படங்களிலேயே பார்க்க முடியாத ஒரு அதிசயம், அவரது போலீஸ் படையில் கூடவே நடக்க ஒரு இளம் பெண் போலீசை சேர்த்திருப்பது. ஐபிஎல் ஆட்டத்துக்கு சீர் லீடர்ஸ் தேவைப்படுவது போல, ஆதித்ய அருணாச்சலத்தின் ஆட்டத்திற்கும் ஒரு சீர்லீடர் தேவைப்பட்டிருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    ரொம்ப சாரி, நயந்தாரா ந்னு ஒரு நடிகையும் இந்தப் படத்துல இருக்காங்க. மறந்துட்டேன். யோகிபாபு உண்மையிலேயே சில ஒன் லைனர்களில் வசீகரிக்கிறார். 'நீயெல்லாம் பையனா ?' , 'உன்னை விட பெரியவன்னா போதி தர்மனை தான் புடிக்கணும்' என்றெல்லாம் சகட்டு மேனிக்கு தலைவரை அவர் கலாய்ப்பது ரசிக்க வைக்கிறது.

    படத்தில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ், உண்மையிலேயே கலங்க வைக்கிறார். அவரது கண்களும் நடிக்கின்றன. பல காட்சிகள் சட்டென ஆரம்பித்து சடக்கென முடிந்து விடுகின்றன. உதாரணமாக கைதிகளைக் கொண்டு வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் காட்சி. பேச ஆரம்பிச்சு ஒரு நிமிசத்துல நேரடியாக போலீஸ் பட்டாளம் வில்லனின் இடத்தை முற்றுகையிடுகின்றன. காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்க கிடைக்கின்ற க்ளூ எல்லாம் ராஜேஷ்குமாராக வேண்டுமென நினைத்து பள்ளிப் பிள்ளைகள் எழுதிப் பார்க்கும் துப்பறியும் கதை போல இருந்தது. அதிலும், மூக்கில வெள்ளையா இருந்துச்சு... ஓ.. அப்போ கோகைன்... என்று சொல்லும்போது, ஷப்ப்பா... என்றிருக்கிறது.

    இரண்டு காட்சிகள் முருகதாஸ் டச்சுடன் இருந்தன. ஒன்று மந்திரியின் மகளைக் கண்டுபிடித்த பின்பும், அதைச் சொல்லாமல் அவளைத் தேடும் சாக்கில் அவர் நடத்துகின்ற வேட்டை. இன்னொன்று வில்லன், பொதுமக்களைக் கொண்டே போலீஸை வேட்டையாட வைக்கும் காட்சி. இரண்டுமே அட போட வைத்தன.

    ரயில் நிலைய சண்டைக்காட்சி 'சிறப்பு, வெகு சிறப்பு' பாணியில் வியக்க வைத்தது. சில இடங்களில் ரஜினியே அடுத்த தலைமுறை நடிகர்களின் மேனரிசத்தைச் செய்தது வியக்க வைத்தது. ரசிக்கவும் வைத்தது.

    அனிருத் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ரசிகர்களுக்கு உற்சாகமே இல்லாமல் போயிருக்கும். ஒண்ணுமே இல்லாத வாணலியில் கூட அம்மாக்கள் கிளறோ கிளறென்று கரண்டியால் கிளறுவது போல, ரசிகர்களை உருப்பேற்றி உசுப்பேற்றி விட்டதில் முக்கிய பங்கு அனிருத்தையே சாரும். அதிலும் அண்ணாமலை இசை, பில்லா கால சிக்னேச்சர் இசையையெல்லாம் நவீனப்படுத்தி அளித்திருப்பது புதுமை.

    படம் முடிந்தபோது அருகில் இருந்த நண்பர் கேட்டார், உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா ? அவர் கேட்டு முடித்ததும் திரையில் கொட்டை எழுத்தில் எழுதிக்காட்டினார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் முருகதாஸ் என்று. நல்லவேளை, சந்தேகம் தீர்ந்தது.

    அட்டகாசமான ரேஸ்காரை களமிறக்கியவர்கள், அதற்கான டிராக்கைப் போட மறந்தது ஏமாற்றமே.

    தர்பார் என்றால் அரசவை என்று பொருள். இங்கே அரை சுவை என வைத்துக் கொள்ளலாம். தமிழாவது வாழட்டும்.

    - சேவியர்

    English summary
    Here is another fan's review about Darbar movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X