twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெல்சன் நீங்களுமா.. அரிவாள் இருக்கு, கதை எதற்கு! வன்முறை களம் நோக்கி தமிழ் இயக்குநர்கள்

    சமீபகாலமாக தமிழ் திரையுலகம் வன்முறை நோக்கி நகர்கிறது என்கிற விமர்சனத்தை நிரூபிக்கும் வண்ணம் இளம் இயக்குனர்கள் படங்கள் வெளியாகிறது. தலைவர் 169 தலைப்பிலும் ரத்தம் தோய்ந்த அரிவாள் அதை மெய்பித்துள்ளது.

    |

    சென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் போஸ்டர் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தம் தோய்ந்த அரிவாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு வன்முறை படத்தை நோக்கி தமிழ் திரையுலகம் நகர்கிறதை இது காட்டுகிறது.

    சமீப காலமாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த இளம் இயக்குநர்களின் படங்கள் அனைத்தும் ஒரே டைப் வன்முறை, சாகசம் கொண்ட படங்களாக வருவது தமிழ் சினிமாவின் தனித்தன்மையை பாதிக்கும் வாய்ப்புண்டு.

    Dark Mode films:Young directors who believe in violent stories

    சர்வதேச புகழ் பெற்ற தமிழ் திரையுலகம்

    இந்திய திரைப்பட துறையில் தமிழ் திரைப்படத்துறைக்கு தனி மரியாதையுண்டு. வலுவான திரைக்கதை. காட்சி அமைப்பு. வலுவான கதாபாத்திரங்கள். அதற்கேற்ற நடிகர்கள் என தமிழ் திரையுலகம் பல சாதனைகளை செய்துள்ளது. வன்முறையில்லாத சமுக அக்கறைக்கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகி சரவதேச புகழை அடைந்துள்ளது.

    சமூக அக்கறைக்கொண்ட நாயகர்கள்

    என்.எஸ்.கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்ரி தொடங்கி 80 கள் 90 கள் வரை பலரும் வலுவான சமூக அக்கறையுள்ள கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நட்சத்திரங்களாக இருந்தனர். தமிழ் திரையுலகில் சிவாஜிகணேசன் ஆகச் சிறந்த நடிகராக உலகம் முழுவதும் பார்க்கப்பட்டார். அவருடைய நடிப்பில் 50-களில் 60-களில் தேசபக்த போராட்ட தலைவர்களின் கதைகள் படமாக்கப்பட்டன. பல புராண படங்கள் வெளிவந்தன. இதுபோன்ற பல பெருமைகளைக் கொண்டது தமிழ் திரைப்பட உலகம்.

    வலுவான கதாபாத்திரங்கள், திரைக்கதைகள்

    சமூக படங்கள் வெளியான நேரத்தில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட அந்தகாலத்து நடிகர்களும் ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார் உள்ளிட்ட இடைப்பட்ட காலத்திலும் அதற்குப் பிறகு வந்த கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் சமூக அக்கறையுள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதேபோன்று நடிகைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுவான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சமூக அக்கறைக்கொண்ட தமிழ் திரைப்படங்கள்

    கதை-வசனத்தில் புகழ்பெற்றது தமிழ் திரையுலகம். கூர் ஈட்டி வசனங்கள், விழிப்புணர்வு வசனங்களைத் அந்தக்காலத்தில் இளங்கோவன் தொடங்கி கலைஞர், ஆரூர்தாஸ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரை கொடுத்த பிரபல வசனகர்த்தாக்கள் பலர் உண்டு. இன்றும் பலர் இருக்கின்றனர். தமிழ் திரையுலகிற்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. வலுவான கதைக்களம் திரைக்கதை அமைப்பு, குடும்பபாங்கான பாத்திரங்கள், இவைகளோடு சேர்த்து இவைகள் அனைத்தும் சமூகத்திற்கு நல்ல பாடங்களை சொல்லித் தரும் வகையில் அமைந்திருந்தன.

    கதையின் பாத்திரங்கள் அனைத்திற்கும் முக்கியத்துவம்

    கதாநாயகன்-கதாநாயகி இருவருக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாகவும் இது தவிர கதையில் வரும் மற்ற பாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு ஆற்றல் கொடுப்பதாக இருக்கும் வகையில் பல குணச்சித்திர நடிகர்களும், வில்லன் பாத்திரம் எது செய்வதாக இருந்தாலும் அந்த கெடுதலாக இருந்தாலும் பெரிய அளவில் கொடூரமாக இல்லாமல் வாழ்வியலோடு சேர்ந்து வாழ்க்கை முறையோடு சேர்ந்தார் போல் இருக்கும். படத்தின் முடிவில் ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் மோதலில் தொடங்கி இனிமையாக நெகிழ்ச்சியூட்டும் வண்ணம் முடியும்.

    சட்டத்துக்கு உட்பட்டவராக காட்டப்பட்ட வில்லன் பாத்திரங்கள்

    பல படங்களில் வில்லன் திருந்திய கதையாகத்தான் இருக்கும். ஒருவேளை வில்லனை கொடூரமாக காட்டினாலும் கடைசியில் அவர் ஏதோ ஒரு வகையில் உயிர் இழப்பது போல் காட்சிகள் இருக்கும். அதில் கொடூரத் தன்மை இருக்காது. அவர் இறக்கும்போது பேசும் வசனம் தன்னுடைய தவறை உணர்ந்தவராக காட்சிப்படுத்தி இருப்பார்கள், அல்லது வில்லன் கூட்டம் போலீசாரால் கைது செய்யப்படுவதாக காட்சி இருக்கும். அதாவது இதன் அர்த்தம் தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது அல்லது என்பதாக இருக்கும்.

    மது அருந்தும் காட்சிகள் யாருக்கு அமைக்கப்பட்டது?

    வில்லனாக வருபவர் மது அருந்துபவராக, கெட்ட நடத்தை உள்ளவராக தண்டிக்கப்படுவார். கதாநாயகன் ஒரு இடத்தில் கூட தவறான பழக்க வழக்கத்திற்கும், மது அருந்துவது, போதைப்பழக்கம், தவறான பழக்கம் உள்ளவர் போன்று காட்சிப்படுத்துவது இருக்காது. அப்படி கதாநாயகன் மது அருந்துவதாக காட்சி இருந்தால் அது காதல் தோல்வி அல்லது வேறு ஏதாவது வில்லனின் சூழ்ச்சியில் சிக்கியது போன்ற காரணங்கள் இருந்தால் அப்படி செய்வதாக காண்பிப்பார்கள்.

    நல்ல கருத்துக்களை சொல்வதில் உறுதியாக இருந்த எம்ஜிஆர்

    திரைப்பட நடிகர்களில் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் மது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளை நடிப்பதை தவிர்த்தார். அதேபோன்று அவருடைய படங்களில் இளைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய வசனங்களும், பாடல்களும் அமைவது போன்று பார்த்துக் கொண்டார். இது மற்ற நடிகர்களின் படங்களிலும் இருந்ததை காணமுடிந்தது.

    அருவருக்கத்தக்க காட்சிகளை தவிர்த்த திரையுலகினர்

    குடும்ப சூழ்நிலை உள்ள கதைகள் கொண்ட படங்கள் திரைக்கதைகளில் குடும்ப உறவுகளை மதிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கும். உறவுமுறைகள், முதலாளி-தொழிலாளி உறவு, அலுவலக நட்புகள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கைமுறை போன்ற காட்சிகளில் கதாசிரியர், திரைக்கதை வசனம் எழுதியவர்களும் இயக்குனர்களும் துளியும் ஆபாசமான அருவருக்கத்தக்க, கொடூரமான விஷயங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

    நடனக்காட்சிகளில் கூட நளினம் இருந்தது

    திரைப்படங்களில் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமான பாத்திரங்கள், நடை, உடை, பாவனைகள், நடனக்காட்சிகளில் கூட கண்ணியம் இருந்தது. ஐட்டம் சாங் எனப்படும் பாடல்கள் மட்டும் தனியாக அதற்குரிய நடிகைகளை வைத்து எடுத்து படத்தில் இணைக்கப்படும். பல நேரம் அவர்களும் படத்தில் சிறப்பான பாத்திரத்தில் வருவார்கள். நடனக் காட்சிகளிலும் நடிகர்கள் தனியாக பெரும்பாலும் நடனம் ஆடாமல் சிறுசிறு அசைவுகள், நடிகைகள், துணை கதாபாத்திரங்கள் நடனங்கள் அனைத்தும் பெண்களுக்கான நளினமிக்க தனி நடனங்களாக அமைக்கப்பட்டிருந்தது. சமீபகாலம் வரை இது இருந்தது.

    வேற்றுமொழிப்படங்களில் எடுக்கப்பட்ட நம்ப முடியாத காட்சிகள்

    சில மொழிப்படங்களில் அங்கிருந்த அந்த மாநில சூழலுக்கு ஏற்றார்போல் வில்லன் கூட்டம் கும்பலாக சேர்ந்து மக்களை வதைக்கும் காட்சிகளும், போலீசாரின் கொடூரங்கள், வில்லன் கும்பல் கொடூரமாக சாதாரண மக்களை தாக்குவது, நடுரோட்டில் கொலை செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. அதை ஒரு கதாநாயகன் வந்து தடுப்பதும், கற்பனைக்கு எட்டாத வகையில் சண்டைக்காட்சிகள் ஒரு மனிதர் 20 பேரை அடிப்பது, தூக்கி எறிவது, வாகனங்கள் பாறப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டன. நடனக் காட்சிகளிலும் ஆண்களும் பெண்களும் ஒரே வகையான ஆபாச அசைவுகளுடன் இருப்பதுபோன்று அமைக்கப்பட்டது.

    தமிழ் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட காட்சிகள் தமிழ் படங்களில்

    இவைகளை எல்லாம் ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே கதாநாயகர் பல மொழிகளில் நடித்து, ஒரே படம் பல மொழிகளில் எழுதப்படும் சூழ்நிலை அமைந்தபொழுது அதற்கான நடனம், சண்டைக் காட்சிகள், வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ் படத்திற்கு உரிய திரைக்கதைகள் மாற்றியமைக்கப்பட்டன. வன்முறை காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டது. கர்ப்பிணிகளை தாக்குவது, பெண்களை தாக்குவது, பாலியல் பலாத்காரம், ரத்தம் கொடூர கொலைகள் கொண்ட காட்சிகள் அமைக்கப்பட்டன.

    மேட்ரிக்ஸ் படம் போன்ற சண்டைக்காட்சிகள்

    வில்லனின் அடியாட்கள் 20, 30 பேர் வருவது அவர்களை தனியாக கதாநாயகன் எதிர்ப்பது. ரத்தம், துப்பாக்கி, வன்முறை காட்சிகள் போன்றவைகள் வலம் வர தொடங்கின. இதன் உச்சகட்டமாக சண்டை காட்சிகள் அனைத்தும் மேட்ரிக்ஸ் படத்தில் வருவது போல் ஒரு குத்து விட்டால் 50 அடி தள்ளிப் போய் விழுவது, அடியாளை ஹீரோ ஒரு அடி அடித்தால் கீழே விழுந்து ரப்பர் பந்து போல் எழும்பி மீண்டும் விழுவதும், ஒரு 20 அடி தூக்கி எறியப்பட்டு டிரான்ஸ்பார்மரில் மோதி வெடித்து விழுவதும், தூக்கி எறியும் போது வாகனத்தில் விழுந்து வாகனங்கள் உடைவது போன்ற கற்பனைக்கெட்டாத காட்சிகள் வந்துவிட்டன.

    ஓவர் ஹீரோயிசம்

    கதாநாயகன் வில்லன் ஆட்கள் மோதிக் கொள்ளும் பொழுது நம்ப முடியாத காட்சிகள் அமைக்கப்பட்டன, அதற்கேற்ப பிஜிஎம் இசை சேர்க்கப்படுவதும், சண்டை காட்சிகள் பெரும்பாலும் பழைய பாழடைந்த மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் நடப்பதாக காண்பிப்பதும் ஒரே வகையான ஸ்டீரியோ டைப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து எந்த இயக்குநரும் மாறி சிந்திப்பதில்லை.

    ஹீரோவும் வில்லனும் மனிதனா? அவெஞ்ஜரா?

    கதாநாயகனை இரும்பு ராடால் முகத்தில் ஓங்கி தாக்குவார்கள், கீழே விழும் கதாநாயகன் திடீரென எழுந்து சாதாரணமாக சண்டை போடுவார். பலமுறை இரும்பு தடியால் கதாநாயகனிடம் அடி வாங்கும் வில்லனின் அடியாட்கள் திரும்பத் திரும்ப வந்து சண்டை போடுவார்கள். கடைசியில் வில்லன் ஆட்களை, வில்லனை கதாநாயகன் கொடூரமாக கொள்வார். ரத்தம் தெறிக்கும் இதுபோன்ற காட்சிகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஹீரோவும் வில்லனும் மனிதப்பிறவிகளா என்கிற சந்தேகமே வருகிறது.

    ஹீரோ, ஹீரோயின் மது அருந்துவது சாதாரணமாக காட்சிப்படுத்தப்படுகிறது

    திரைக்கதையில் கவனம் செலுத்துவதைவிட டார்க் மோடு காட்சிகள், ஐட்டம் சாங், குத்து சாங், ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள், கொடூர கொலைகள் இதில் இளம் இயக்குனர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலமாக பார்க்கலாம். அதேபோன்று கதாநாயகன் அவருடைய நண்பர்கள் சாதாரணமாக பேசும் போதே ஒரு பாரில் சென்று மது அருந்தியபடி பேசுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு தற்போது அதையும் தாண்டி கதாநாயகிகளும் மது அருந்துவது போன்ற காட்சிகள் பல படங்களில் காண முடிகிறது.

    ஸ்வீட் பழம் வாங்கிச் செல்வது போல் ஷாம்பெய்ன் வாங்கிச் செல்லும் காட்சி

    ஒரு படத்தில் கதாநாயகனை பார்க்கச் செல்லும் நாயகி ஷாம்பெய்ன் பாட்டிலை வாங்கிச் செல்வார், நாம் எந்த நாட்டில் வாழ்வதாக படம் எடுக்கும் இயக்குநர்கள் நினைக்கிறார்கள், படம் எடுத்த இயக்குநர் தங்கள் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போகும்போது ஷாம்பெய்ன் பாட்டில்தான் வாங்கிச் சென்றாரா?. மேல் நாடுகளில் இது சகஜம், இது மேல் நாட்டு கலாச்சாரம், இதை இங்கு காட்சியாக வைப்பது இவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டியுள்ளது. (அதன் பின்னர் கதாநாயகன், அவருடைய தங்கை, ஹீரோயின் மது அருந்தும் காட்சியும் உண்டு).

    இதுதான் திரைப்படங்களில் பெண்கள் முன்னேற்றம்

    திரைப்படங்களில் பெண்கள் முன்னேற்றமாக காட்டப்படுவது டைட் ஜீன்ஸ், பனியன், கூலிங்கிளாஸ், நாயகனுடன் பைக்கில் போவது, மது அருந்துவது என இன்றைய இளம் இயக்குநர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் தற்போது வரும் படங்களில் நடிக்கும் முன்னணி நாயகிகள் ஓரிரண்டு குத்துப்பாட்டு சிலகாட்சிகளில் கதாநாயகனோடு நிற்பது போன்ற காட்சிகளுடன் காணாமல் போவதை பார்க்கிறோம். இன்னும் சில படங்களை கதாநாயகிகளை நடைமுறை அறிவு இல்லாதவர் போன்றும், கதாநாயகன் இக்கட்டான நேரத்தில் இருக்கும்போது கிறுக்குத்தனமாக செயல்படுபவர் போன்றும் காட்சி அமைக்கிறார்கள்.

    ஹீரோ ஒர்ஷிப்புக்காக பலி கொடுக்கப்படும் ஹீரோயின் பாத்திரங்கள்

    இதுபோன்ற காட்சிகள் அனைத்தும் பெண்களை மரியாதைக்குறைவாகவும், திறமையற்றவர்கள், ஆண் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்கிற கருத்தை வலியுறுத்துபவைகளே தவிர வேறொன்றும் இல்லை. சுவிங்கம் மென்றபடி நவீன உடையுடன் ஹீரோ கூட நின்று போகும் பாத்திரங்களாக கதாநாயகிகள் பாத்திரம் சுருங்கிப்போவதன் காரணம் என்ன? ஹீரோ ஒர்ஷிப்புக்காக பெண் பாத்திரங்களை மட்டமாக அமைப்பதும், குத்து டான்ஸுக்காக வேண்டும் என்பதாக மட்டுமே கதாநாயகிகள் பெரிய நடிகர்களின் படங்களில் நடத்தப்படுகிறார்கள்.

    மாறாதா இளம் தலைமுறையினர் எண்ணம்?

    இவை அனைத்துமே படத்தை பார்க்கும் இளம் தலைமுறையினர் தங்களுடைய ஆதர்ச நாயகன் செய்வதை போல் தானும் செய்ய வேண்டும் என்பதை நோக்கி நகரும் மனநிலையை ஏற்படுத்தலாம். மது போதை கலாச்சாரத்திற்கு இளம் தலைமுறையினர் தள்ளப்படுவதற்கு இதுபோன்ற திரைப்படங்களும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று சமூக அக்கறையுள்ளவர்கள் அவ்வப்போது சொல்லி வந்தாலும் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

    சுயத்தை இழக்கும் இளம் இயக்குநர்கள்

    இதில் சமீபகாலமாக ஒரு விஷயத்தை கவனித்தோம் என்றால் இளம் இயக்குனர்களாக வருபவர்கள் முதல் படத்தை எப்படியோ செதுக்கி செதுக்கி நல்ல படம் எடுத்து வெற்றியடைய வைக்கின்றனர். இதில் முன்னணி கதாநாயகர்கள் தங்களுடைய படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக தற்போதைய டிரெண்ட்டுக்காக இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக இளம் இயக்குநர்களை பயன்படுத்துகின்றனர். மிகப் பெரிய இயக்குனர்களின் கால்ஷீட் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக ஹீரோ ஒர்ஷிப் படங்களை எடுக்கும் நிலைக்கு இளம் இயக்குனர்கள் தள்ளப்படுகின்றனர்.

    ஹீரோ ஒர்ஷிப் மனநிலை உள்ள ரசிகர்களை குறிவைக்கும் இயக்குநர்கள்

    ஓரிருவர் அதில் தங்களுடைய தனித்தன்மையை இழக்காமல் படம் எடுத்தாலும் பெரும்பாலான இளம் இயக்குனர்கள் ஹீரோ ஒர்ஷிப் கதைகளையே எடுப்பதைக் காண்கின்றோம். இதன் விளைவு சமீபமாக ஒரு 5 ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் எந்த பாதை நோக்கி செல்கிறது என்கிற கவலையை சமூக ஆர்வலர்கள் சமூக அக்கறை கொண்டோர் கேள்வியாக முன் வைக்கின்றனர். ஹீரோக்களை போற்றும் மனநிலையில் உள்ள ரசிகர்கள் மட்டுமே இந்த இயக்குனர்களின் குறி. அதற்காக திரைப்படம் எடுப்பது அவர்களின் குறிக்கோள். அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் திரைப்படம் எடுக்கும் போக்கு உள்ளதை காண முடிகிறது.

    குத்துப்பாட்டு, வன்முறைக்காட்சிக்காக வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள்

    இதில் இன்னொரு கவலை தரும் விஷயம் தான் இந்தியா படங்கள் என்று சொல்லிக்கொண்டு பல மொழிகளில் படங்களை எடுப்பது, சாதாரண சண்டை காட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் போக்கும் உள்ளது. இதை மிகப்பெரிய சாதனையாக சொல்லும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு காட்சிக்காக குறிப்பிட்ட வகை கேமராவை பயன்படுத்தினேன், அந்த கேமரா ஒரு சில காட்சிகள் எடுக்க ரூ 2 லட்சம் 3 லட்சம் செலவானது என்று பெருமையுடன் வரும் பேட்டிகளை காண்கின்றோம்.

    கோடிகளை கொட்டி வீணடிக்கப்படும் காட்சிக்கு பணத்தை கொடுப்பதும் ரசிகரே

    ஒரு பாடலுக்காக வெளிநாட்டுக்குச் சென்று கோடிக்கணக்கில் பணம் செலவழித்து எடுப்பதும், ஒரு சண்டைக் காட்சிக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ரத்தக்கறையுடன் படத்தை எடுப்பதும், துப்பாக்கிகள், குண்டுகள், வெடித்து சிதறும் வாகனங்கள், ரத்தக்களறி என காட்சிப்படுத்துவதற்கு டார்க்மோடு-ல் படம் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி ஆங்கில பாணியில் குறிப்பாக தென்அமெரிக்க பட பாணியில் நடத்தப்படும் இத்தகைய காட்சிகளால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் திரைத் துறையினருக்கு மட்டுமே, இவர்கள் இதற்காக செலவழிக்கும் கோடியை மிகச் சாதாரணமாக ரசிகர்களிடம் சிறப்பு காட்சிகள் என ரசிகர்களுடைய ஆர்வத்தை தூண்டுவது போன்றவைகளால் மிக எளிதில் ஓரிரு வாரங்களில் பணத்தை எடுத்து விடுகின்றனர்.

    நாலு பேரை மட்டுமே அடித்த எம்ஜிஆர் தான் இன்றும் எவர்கிரீன் ஆக்‌ஷன் ஹீரோ

    ஆனால் இதை ஒரு சாதனையாக ரசிகர்கள் பார்க்கும் மனோபாவம் இன்று காணப்படுகின்றது. நான்கைந்து பேர்களை அடித்து ஒரு வில்லனை மட்டும் சமாளித்த எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக இருந்தனர். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதில் சமூக அக்கறை அதிகம் இருந்ததால் அதற்கு ஏற்ப திரைக்கதைகள், சண்டைக்காட்சிகள், காட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரேமும் பார்த்து பார்த்து வைக்கப்பட்டது. இதற்கு பல உதாரணங்களை இதற்கு முன் இருந்த நடிகர்களிடம் காண முடிந்தது.

    சமுதாய நலன் பற்றிய கொஞ்சமும் அக்கறைப்படாத இளம் இயக்குநர்கள்

    ஆனால் சமீப காலமாக இந்த போக்கு எதைப்பற்றியும் கவலைப்படாத போக்கு சமூகத்தைப் பற்றி, இளம் தலைமுறையினரை பற்றி, அவர்கள் மனநிலை பற்றி, அடுத்து ஒரு வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்க நாமும் காரணமாக இருக்கின்றோம் என்கின்ற கவலை சிறிதும் இன்றி இளம் இயக்குனர்கள், உச்ச நடிகர்கள் செயல்படுவதை சமூக ஆர்வலர்கள், சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் கவலையுடன் பார்க்கும் போக்கை காணமுடிகிறது.

    Dark Mode films:Young directors who believe in violent stories

    பப்ஜி ஸ்குயிட் கேம் மட்டுமல்ல வன்முறை படங்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே

    பப்ஜி, ஸ்குயிட் கேம்கள் எவ்வாறு இளம் தலைமுறையினரை பாதித்து உளவியல் ரீதியாக அவர்களை வன்முறை எண்ணம் கொண்டவர்களாக மாற்றுகிறதோ, அதே அளவு பாதிப்பு தன்னுடைய ஆதர்ச ஹீரோ நடிக்கும் படங்களில் வன்முறை, ரத்தக்களறி காட்சிகளை, சமுதாயத்திற்கு ஒவ்வாத காட்சிகளை, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை காணும் ஒரு இளம் தலைமுறை இளைஞர்கள் அவரை பின்பற்றி தாமும் அதே போன்று நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    உளவியல் நிபுணர்களின் கவலையை பாருங்கள்

    ஆன்லைன் கேமாக இருந்தாலும், வன்முறைக்காட்சிகள் கொண்ட ஆதர்ச ஹீரோ படமாக இருந்தாலும் அதனுடைய பின்விளைவுகளை ஒன்றுதான் வன்முறை எண்ணத்தை தூண்டி விடுவது ஒன்றுதான். குடும்பம், குடும்பவாழ்க்கை, குடும்பச் சூழலுக்குள் வளர்வது, நல்ல எண்ணங்கள், சமுதாயத்திற்குள் கட்டுப்பட்டு வாழ்வது, சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வது போன்ற எண்ணங்கள் கேவலமானவை இவைகளை விட்டு இது என் வாழ்க்கை, வாழ்க்கை ஒரு முறைதான் அதை இப்படித்தான் வாழவேண்டும், பப்புக்கு போகவேண்டும், குடிக்கவேண்டும், சிறிதும் மன்னிக்கும் மனப்பான்மை இருக்கக்கூடாது, சகிப்புத்தன்மை இருக்க கூடாது, எப்போதும் சண்டையிடும் மனப்பான்மையில் இருக்க வேண்டும் என்பதாக இளம் தலைமுறையினர் எண்ணம் மாறும் வாய்ப்பு உள்ளது.

    மாற்று பாதை திரைப்படங்கள் தேவை அதிகம்

    வன்முறை அதிகம் கொண்ட திரைக் காட்சிகள், தாக்க வேண்டும் என்கிற மனநிலையை இளம் தலைமுறையினர் மத்தியில் விதைக்கும் பொழுது அவைகள் காட்சிகளாக கதாநாயகர்கள் படத்தின் செய்யும் பொழுது அதை பார்க்கும் இளம் தலைமுறையினர் அதேபோன்று வளர்வதைத் தான் காண முடியும் இது மிக மோசமான ஒன்று என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவை தவிர்க்கப்பட வேண்டுமானால் இதற்கு எதிரான கருத்துக்கள் அதிகம் வர வேண்டும் என்பதே எல்லோரும் சொல்லக் கூடிய விஷயமாக உள்ளது.

    ஹாலிவுட் டெக்னாலஜி சரி வாழ்க்கை முறையை திணிக்காதீர்கள்

    சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் மிகப் பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்த பிறகு அவர்களுடைய நோக்கம் எல்லாம் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தை காப்பியடித்து அதுபோன்று எடுப்பது என்பது ஹாலிவுட் படங்களின் ஆங்கில படங்களில் வெளி நாடுகளில் வாழ்பவர்கள் வாழ்க்கை முறை வேறு நம் நாடு உடைய வாழ்க்கை முறை வேறு என்பதை மறந்து பொதுமைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் வைப்பதை சமீப கால படங்களில் பார்க்க முடிகிறது.

    போதை கலாச்சாரத்திற்கு எதிர் என சொல்லி வன்முறையை தூண்டும் படங்கள்

    குறிப்பாக, திரைக்கதை பெரிதாக இல்லாமல் ஒரு சம்பவத்தை மட்டுமே படமாக்குவது, மது, போதை, கஞ்சா, போதை மருந்துகளாள் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்பது போன்ற காட்சியை எடுத்துக் கொண்டு அவைகளை காட்சிப் படுத்துகிறேன் என்ற போர்வையில் முற்றிலும் வன்முறையாக, அதை தடுக்கும் கதாநாயகனும் அதே வன்முறையில் ஈடுபடுவதாக காண்பிப்பதை பல படங்களில் பார்க்கமுடிகிறது.

    உச்ச நடிகர்கள் படங்களின் வன்முறைக்காட்சிகள்

    சமீபத்தில் வந்த படங்கள் அனைத்திலும் திரைக்கதைகள் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. நகரத்தையே ஆட்டிப்படைக்கும் மது, போதை கும்பல் இருக்கும். போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து தடுப்பார். இப்போதெல்லாம (ரா உளவுத்துறை அதிகாரி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்) சில காட்சிகளில் சிறுவர்கள் கடத்தப்படுவார்கள், ஜெயிலில் இளைஞர்கள் கஷ்டப்படுவார்கள் ஹீரோ வருவார் காப்பாற்றுவார். தீவிரவாதிகள் பொது மக்களை பிடித்து வைத்திருப்பார்கள் அவருடன் மோதும் ஹீரோ மக்களை காப்பாற்றுவார். தங்கை வெளிமாநிலத்தில் சிக்கி தவிப்பார், அவரை காப்பாற்றச் செல்லும் ஹீரோ தாதாக்களுடன் மோதுவார்.

    ஹீரோயிசம் மட்டுமே, லாஜிக் ம்ஹூம்..

    இதுபோன்ற வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களை தற்போது காணப்படுகிறது. சமீபத்தில் வந்த விக்ரம் முதல் கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, பீஸ்ட், வலிமை, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் திரைக்கதை ஹீரோஹிசம், வன்முறை மட்டுமே. அதிலும் வாடகை சைக்கிளை எடுப்பது போல் போர் விமானத்தை எடுத்துச் சென்று அண்டை நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாதியை பிடித்து வரும் அபத்தக்காட்சிகள், பில்டிங் விட்டு பில்டிங் பைக் தாவுவது, 200 பேர் கடும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்பவர்கள் ஹீரோ 2 நிமிடம் பேசியவுடன் அழுதபடி பச்சபுள்ளைபோல் செல்லும் காட்சியெல்லாம் இளம் இயக்குநர்களின் ஆழ்ந்த(?) திரைக்கதை அறிவுக்கு சாட்சி.

    பெரிய நடிகர்களும் சிக்கிக்கொண்டனர்

    சமூக அக்கறையுள்ள கலைஞர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்து எடுத்த விக்ரம் படத்தில் இதுவரை கமல் படங்களில் இல்லாத அளவிற்கு வன்முறையும், ரத்தக்களறி காட்சிகளையும் காண முடிந்தது. படத்தில் கஞ்சா விற்கும் வில்லன் சண்டை போடும் பொழுது தாக்கப்பட்ட பின் கஞ்சாவை எடுத்து வாயில் போட்ட பின் அவருக்கு கூடுதல் பலம் கிடைப்பதுபோன்ற காட்சிகள் இளம் தலைமுறையினர் மத்தியில் நல்லதையா சொல்லிக்கொடுக்கும். தீமையை அழிக்கும் காட்சியில் தீமையின் அத்தனை அம்சங்களையும் காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து.

    சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர் ஹீரோ..தடுப்பவர் வில்லன்

    இது போன்று சமீப கால படங்களில் கதாநாயகர்களை சட்டவிரோத செயல்களை செய்பவராக அல்லது சட்ட விரோத செயல்களை செய்பவர்கள் கதாநாயகர்களாக மாற்றி அவர்களைக் கொண்டாடும் வகையில் படம் எடுப்பதை காண முடிகிறது. கேஜிஎப், கேஜிஎப்-2, விக்ரம் போன்ற படங்களில் கதாநாயகன் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்பவர், செம்மரக்கடத்தல் செய்பவர், தங்க கடத்தலில் ஈடுபடுவோர் போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவர்களை தடுக்கும் வில்லன்களாக சட்டத்தை பாதுகாக்கும் போலீசார் இருப்பதைக் காண முடியும். இது போன்ற காட்சிகள் வன்முறை தவறான பாதையில் செல்வது சரிதான் என இளம் தலைமுறையினர் மத்தியில் விதைக்கப்படுகிறது.

    Dark Mode films:Young directors who believe in violent stories

    மங்காத்தா பாணி படங்கள் எதை போதிக்கின்றன?

    முன்பெல்லாம் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பவர்கள் ஹீரோக்கள் என்கிற நிலை மாறி, தவறு செய்பவர்களாக ஹீரோக்கள், அல்லது ஆஸ்தான நடிகள், அதை தட்டிக் கேட்கும் போலீசார், சமூக அக்கறையுள்ளவர்களை வில்லன்கள் அல்லது காமெடியன்களாக காட்சிப்படுத்தப்படுவதும் தற்போதைய திரைப்படங்களில் காணமுடிகிறது. எப்படியாவது தவறு செய்து பணம் சேர்த்து வசதியாக மாற வேண்டும் என்கிற மங்காத்தா பாணி கதைகள் அதிகம் வருவது மிகவும் ஆபத்தான போக்கு.

    சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டாலும் கவலைப்படாத இயக்குநர்கள்

    இதுபோன்ற தொடர் திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தால் அது இளம் தலைமுறையினர் மத்தியில் சட்டத்தை மீறலாம் என்ற மனோநிலையை வளர்ந்துவிடும். சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் எடுக்கும் படங்களில் கற்பனைக்கு எட்டாத யாரும் சிந்திக்கக் கூட முடியாத யதார்த்தத்திற்கு புறம்பான காட்சிகளும் அமைக்கப்படுவது. சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கப்படுவதையும் பார்க்கின்றோம்.

    எளிதாக அனுமதிக்கப்படும் வன்முறைக்காட்சிகள்

    வன்முறை காட்சிகள் சண்டைக் காட்சிகளில் முன்பெல்லாம் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை தவிர்க்கச் சொல்லி சென்சார்போர்டு சொல்லும். ஆனால் ரத்தம் தெறிப்பது, கழுத்தில் குத்துவது ரத்தம் பீரிடுவது போன்ற காட்சிகள் சாதாரணமாக வைக்கப்பட்டு அதற்கு யூ/எ சர்டிபிகேட்டும் வழங்கப்படுகிறது. இதைப் பார்த்து வளரும் இளம் தலைமுறையினர் வன்முறை எண்ணம் கொண்டவர்களாக வளர அல்லது சட்டத்திற்கு உட்பட்ட நல்ல குடிமகனாக வளர வேண்டிய அவசியமில்லை என்கிற எண்ணத்திற்கு மாற வாய்ப்புள்ளது என்பதுப் பற்றி இயக்குநர்கள் சிந்திப்பதே இல்லை.

    வெற்றியை மட்டுமே யோசிக்கும் பெரியநடிகர்கள்

    இதில் கால்ஷீட் கொடுக்கும் முக்கிய நடிகர்களும் அடக்கம், அவர்கள் அவர்களது பொறுப்பை உணர்வதில்லை என்பது வேதனை தரும் விஷயம் (ஏனென்றால் இயக்குநர்களை அவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்). இன்று வெளியான தலைவர் 169 டைட்டில் ஜெயிலர் பற்றிய அறிவிப்பு போஸ்டரில் ரத்தம் தோய்ந்த அரிவாள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நடிகர் நடித்து வெளியாகும் படம் ஏற்கனவே வன்முறை காட்சிகள் அதிகம் உள்ள படங்கள் வெளிவரும் சூழலில் இந்த படத்தின் போஸ்டரிலும் ரத்தம் தோய்ந்த அரிவாள் இருப்பது போல் காட்சி படுத்தி உள்ளனர்.

    Dark Mode films:Young directors who believe in violent stories

    வெற்றி ஒன்றே குறிக்கோள் என்பதால் பலி கொடுக்கப்படும் சமுதாய அக்கறை

    இதன்மூலம் இதுவும் இன்னொரு வன்முறை படமாக ஜெயிலர் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர். வெற்றி பெறுவதற்கு இதுதான் ஃபார்முலா என வன்முறை காட்சிகள் அதிகம் கொண்ட படங்களை முன்னணி நடிகர்கள் நடிப்பதை தவிர்த்தால்லொழிய இது போன்ற படங்களை எடுக்கும் எண்ணத்தை தவிர்க்க முடியாது. நல்ல திரைக்கதை பாத்திரங்கள் உள்ள படங்கள் வருவது இல்லையா என்று கேட்டால் ஏராளமான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகளுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை ஓடிடி தளங்களில் அவைகள் வெளியிடப்படுகின்றன.

    மெகா பட்ஜெட், பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் போன்றவைகளால் தவிர்க்கப்படும் நல்ல கதைகள்

    நல்ல படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தாலும் மிகப்பெரிய பட்ஜெட், மிகப்பெரிய வசூல், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் போன்ற வார்த்தைகள் போன்ற சமாச்சாரங்கள் காரணமாக மீண்டும், மீண்டும் இத்தகைய படமெடுக்கும் இயக்குனர்களும், வன்முறைகள் கொண்ட படம் எடுப்பவர்களும், படத்தில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் அதை அனுமதிப்பதும் தமிழக திரைத்துறையின் மோசமான நிகழ்வு ஆகும்.

    வன்முறை, ரத்தம் மட்டும்தான் தமிழ் படமா?

    இது தொடர்ந்தால் தமிழக திரைத்துறை வன்முறையை நோக்கி நகரும் கதைகளைக் கொண்ட ஒரு தளமாக அமையுமே தவிர, அதற்காக இருந்த தனித்தன்மை மாறி நல்ல திரைப்படங்கள், வலுவான கதைக்களங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அருமையான படைப்புகளை படைத்த திரையுலகமாக இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

    English summary
    In Recent times, Most of the Young Directors Making Tamil Movies, based on the violence a lot. Thalaivar 169 Movie “Jailor” First Poster With Bloody Weapon is one of the proof for this scenario.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X