Dasara : தசரா மகத்தான வெற்றி.. இயக்குநருக்கு தயாரிப்பாளர் கொடுத்த தரமான பரிசு!
சென்னை : நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தசரா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை அள்ளிஉள்ளதால் தசரா படக்குழு மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ்,சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.

புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒடேலா ஸ்ரீகாந்த் தசரா படத்தில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
தசரா : தசரா படத்தில் நானி வாயில் டீ, கையில் சரக்கு என படம் முழுக்க ரக்கட்பாய் போலவே வலம் வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பிளஸாக அமைந்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
மகத்தான வசூல் : தெலுங்கில் உருவான தசரா திரைப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர். இப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

வசூல் மேலும் அதிகரிக்கும் : தசரா திரைப்படம் ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை தினம் வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இயக்குநருக்கு பரிசு : இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு விலையுயர்ந்த BMW சொகுசு காரை பரிசளித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு 10 கிராம் தங்க நாணயங்களையும் பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











