டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சர்ச்சையை கிளப்பிய பாடல் வரிகள் நீக்கம்.. ஆர்யா எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தில் திருப்பதி ஏழுமலையான் பாடலை கிண்டல் செய்யும் விதமாக கிஸ்ஸா பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் தொடர்பான பாடலை தவறாக சித்தரித்து உருவாக்கவில்லை என்றும் தானும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லும் பக்தன் தான் என சந்தானம் பேசியிருந்தார். ஆனால், பாடலை நீக்கவில்லை என்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என மான நஷ்ட வழக்கை போட்ட நிலையில், தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கூல் சுரேஷ் பவன் கல்யாண் காலில் கூட விழுகிறேன், சந்தானம் படத்தை தடை செய்ய வேண்டாம் என நேற்று நடைபெற்ற பட விழாவில் பகிரங்கமாக கீழே விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழு பாடலை நீக்கியுள்ளது.
சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்: "கோவிந்தா கோவிந்தா" என்கிற வரிகள் இடம்பெற்ற கிஸ்ஸா பாடல் ஏழுமலையான் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி மீண்டும் மறு தணிக்கையை படக்குழு பெற்றுள்ளது. நாளை வெளியாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் அந்த பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு எதிர்ப்பு: திருப்பதி ஏழுமலையானின் நாமத்தை கிண்டல் மற்றும் கேலியாக பாடல்கள் மற்றும் படங்களில் பயன்படுத்தக் கூடாது என ஜனசேனா கட்சி கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்காவிட்டால் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்பி.க்களை கூட திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பிரச்சனை வெடித்த நிலையில், படக்குழு அந்த பாடல் வரிகளை நீக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், இருந்தாலும், பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்ற தெரிவிக்க பட தயாரிப்பு நிறுவனங்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர். அதன்படி விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.
பாவம் ஆர்யா: நடிகர் சந்தானம் நண்பர் என்பதால் அவரை நம்பி பல கோடி ரூபாய் பணம் போட்டு இந்த படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். கடைசி நேரத்தில் படம் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்படும் அளவுக்கு படக்குழு அவருக்கு சிக்கல் கொடுத்து விட்டதாகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கிய பாடல் தற்போது படத்தில் இடம்பெறவில்லையே என்றும் ரசிகர்கள் ஆர்யாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இனிமேல் புதிய படங்களை இயக்கும் இயக்குநர்கள் எல்லாம் மத ரீதியான சர்ச்சையை கிளப்பும் படங்களையும் வசனங்களையும் பாடல்களையும் பயன்படுத்தினால் இதே போன்ற பிரச்னைகள் உருவாகும் என தெரிகிறது. அதனால், மத ரீதியிலான விஷயங்களை ட்ரோல் செய்வதை படக்குழுவினர் முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் படைப்பு சுதந்திரம் என்கிற ஒன்றே இல்லாமல் போய் விட்டதாகவும் கூறி வருகின்றனர். நடிகர் சந்தானத்துக்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா? அல்லது கை விடுமா என்பது நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











