நான் உணர்ந்ததை சொல்ல... நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட தீபிகா
மும்பை: நடிகை தீபிகா படுகோன் நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நடிகை தீபிகா படுகோன், தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பிசி நடிகையான இவர் சப்பாக் என்ற படத்தில் திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். உண்மைக் கதையான இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று நடத்தும் நடன நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
நடன இயக்குனரும் ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்சர் படங்களின் இயக்குனரான ரெமோ டிசோசா இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்.

பத்மாவத் பட பாடல்
இதில் நடிகை தீபிகா படுகோனை கவுரவிக்கும் விதமாக அவர் நடித்த பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ள கூமார் என்ற பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர். இந்த நடனத்தை இருக்கையில் இருந்தபடி கைதட்டி, ரசித்தார் தீபிகா.

திடீரென்று எழுந்தார்
பின்னர் பாடல் முடிந்தபோது திடீரென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்ற தீபிகா, கை தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். அவர் நா தழுதழுத்தது.

டிசோசா ஆறுதல்
இதையடுத்து ரெமோ டிசோசா, அவரைக் கட்டிபிடித்து ஆறுதல் சொன்னார். பின்னர் மேடையேறிய தீபிகா, நடன கலைஞர்களை பாராட்டினார். பின் அவர்களிடையே பேசினார்.

இதயத்தில் இருந்து
அப்போது, நான் பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இன்று நான் உணர்ந்ததை சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் என் இதயத்தில் இருந்து சொல்கிறேன். தேங் யூ ஸோ மச் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











