ரியல் சிங்கப்பெண் இவர்தான்.. தீபிகா படுகோனின் ’சபக்’ டிரைலர் ரிலீஸ்!
மும்பை: தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள சபக் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்கு இடையே தனது வாழ்க்கையை பல பெண்களுக்கும் முன்னுதாரணமாக மாற்றிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் தான் சபக்.
மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டூடியோஸுடன் இணைந்து மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோன் தயாரித்துள்ளனர்.

கண்ணீர் விட்டு அழுத தீபிகா
2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. டிரைலர் திரையிடப்பட்டதன் பின்னர் மேடை ஏறிய தீபிகா படுகோன் மனமுடைந்து அழுதுவிட்டார். இயக்குநர் மேக்னா குல்சார் மற்றும் சக நடிகர் விக்ரந்த் மசாய் இணைந்து அவரை ஆறுதல் படுத்தினர்.
ஆத்மார்த்தமாக
பின்னர் பேசிய தீபிகா படுகோன், சில கதைகளை கேட்டு விட்டு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். ஆனால், இந்த கதையை கேட்ட போது, அது எப்படி உருவாக வேண்டும் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்ற சிந்தனையுடன் தான் களத்தில் இறங்கினேன் என்றார்.
மேலும், மிகவும் ஆத்மார்த்தமாக இந்த படத்தை செய்துள்ளதாகவும், அனைவருக்கும் நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என்றும் தீபிகா படுகோன் மேடையில் பேசினார்.
டிரைலர் எப்படி இருக்கு?
Chhapaak படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே, உலக தரம் வாய்ந்த படைப்பாக இந்த படம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் தீபிகா படுகோனின் நடிப்பு மற்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆசிட் அடித்த நிலையில் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது தீபிகா படுகோன் அழும் காட்சி நிச்சயம் ரசிகர்களை திரையரங்குகளில் கண் கலங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தயாரிப்பாளர் தீபிகா
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்ட தீபிகா படுகோன், நடிப்போடு நிறுத்திவிடாமல், கதையின் மீது இருந்த ஆர்வத்தில், அதனை தயாரிக்கவும் முன்வந்துள்ளார். இதுமாதிரியான படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் எந்தளவுக்கு ஓடும் என்ற சந்தேகம் பொதுவாக பலருக்கும் எழுகின்ற நிலையில், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், நல்ல கதையை நாம செய்யலாம் என முடிவெடுத்து தயாரித்த தீபிகா படுகோனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.


Click it and Unblock the Notifications











