ஹே ராம்-ல அந்த ரோல் வேண்டாம்னு சொன்னேன்.. ஷாருக்கான் கொடுத்த ரியாக்ஷன்.. டெல்லி கணேஷ் பேட்டி!
சென்னை: 400 படங்களுக்கு மேல் நடித்த தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணியாற்றியது குறித்தும் நாயகன், ஹேராம் படங்களில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்துள்ளார்.

79 வயதாகும் டெல்லி கணேஷ் சமீப காலமாக தன்னை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
லவ் டுடே: லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக பிரதீப் ஆண்டனி அறிமுகமானார். அந்த படம் உருவாவதற்கு முன்னதாக அப்பா லாக் எனும் டைட்டிலில் எடுத்த குறும்படத்தில் சத்யராஜுக்கு பதிலாக டெல்லி கணேஷ் தான் நடித்திருந்தார். ஆனால், அந்த குறும்படம் சினிமாவாக உருவாகும் போது டெல்லி கணேஷை கழட்டி விட்டுட்டு சத்யராஜை நடிக்க வைத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்து வரும் டெல்லி கணேஷ் இப்போதெல்லாம் சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் வருவது இல்லை என்கிற வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
ரஜினி நல்லா பாராட்டுவார்: பாராட்டுவதில் ரஜினிகாந்தை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரது 100வது படமான ராகவேந்திரா படத்தில் நடித்த போது, கடைசியில் ஸ்லோகம் ஒன்று சொன்னால் நல்லா இருக்கும் என இயக்குநர் விரும்பினார். உடனடியாக நான் ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன். செட்டுக்கு வெளியே இருந்து உள்ளே வந்து விட்டார் ரஜினிகாந்த். வந்து, நீங்களா இதை சொன்னது. ரொம்ப சூப்பரா இருக்கு என பாராட்டினார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நடிகர்களையும் அவர்களது நடிப்பையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு ரஜினி பாராட்டுவார் என்றார்.
ஹேராமில் நடிக்க மறுத்தேன்: நாயகன் படத்தில் கமலின் நண்பராக நடிக்கும் கதாபாத்திரம். முதல் நாள் எனக்கு கதையே தெரியாது. என் நடிப்பை பார்த்து விட்டு என்னிடம் வந்து பேசினார் கமல். உங்களுக்கு என்ன கதைன்னு தெரியுமான்னு கேட்டார். தெரியாது என்றேன். அதான் உங்க நடிப்புலயே தெரியுது என்று சொல்லி விட்டு படத்தின் கதையையும் என்னுடைய கதாபாத்திரத்தையும் சுருக்கமாக சொன்னார். அதை பிடித்துக் கொண்டு நடித்தேன். பின்னர் என்னை ரொம்பவே பாராட்டினார். ஹேராம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார். இந்த ரோல் வேண்டாம் என்றே சொன்னேன்.
ஷாருக்கான் ரியாக்ஷன்: அதெல்லாம் ஒண்ணுமில்லை பண்ணுங்க, நல்லா வரும் என்று ஊக்கப்படுத்தினார். அருகே இருந்த ஷாருக்கானிடம் என்னை பற்றி அவ்வை சண்முகி இந்தியில் சாச்சா 420 என்கிற பெயரில் வந்தது. அதில், ஓம்புரி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடித்தது இவர் தான் என்றார். ஷாருக்கான் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டே.. அச்சா சூப்பர் என பாராட்டியபடியே ரியாக்ஷன் கொடுத்தார் என்று பல விஷயங்களில் பகிர்ந்து கொண்டார் டெல்லி கணேஷ்.


Click it and Unblock the Notifications











