80 வயசு ஆகிடுச்சு.. டெல்லி கணேஷுக்கு நடைபெற்ற சதாபிஷேக விழா.. மனைவியோடு செம மாஸ் போஸ்!
சென்னை: 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த நடிகர் டெல்லி கணேஷ் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சதாபிஷேக விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து யூடியூப் காலம் வரை பல படங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ள திறமையான நடிகர் டெல்லி கணேஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
திருநெல்வேலியில் உள்ள பத்தமடையில் பிறந்து வளர்ந்த டெல்லி கணேஷ் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

1981ம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் அதிகமாக நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ்: பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு நடிகர்களுமே தமிழ் சினிமாவில் தங்களுக்கான தனி அடையாளத்துடன் உள்ளனர். டெல்லி கணேஷின் அசாத்திய நடிப்புத் திறமை காரணமாக கமல்ஹாசனின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே போல ரஜினிகாந்த் உடன் இணைந்து பொல்லாதவன், படிக்காதவன், ராகவேந்திரா என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த வயதிலும்: 80 வயதாகும் நடிகர் டெல்லி கணேஷ் இந்த வயதிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு வெளியான விஷாலின் ரத்னம் மற்றும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற அரண்மனை 4 மற்றும் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சதாபிஷேக விழா: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கடந்த ஆண்டு சதாபிஷேக விழாவை நடத்தியிருந்தார். இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் இன்று தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு சதாபிஷேக விழாவை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
டெல்லி கணேஷ் குடும்பம்: டெல்லி கணேஷ் தனது மனைவியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷும் தமிழ் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











