இந்த லட்சணத்துல கதை சொன்னா விஜய் எப்படி ஓ.கே. சொல்லுவாரு - டிமான்டி காலனி 2 இயக்குநர் பேச்சு
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
டிமான்டி காலனி 2 படத்தின் புரோமோசனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துவரும் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்க்கு கதை சொன்னது குறித்து பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. துப்பாக்கி படத்தின் உதவி இயக்குநராக இருந்தபோது விஜய் உடன் பழக்கம் ஏற்பட்டது எனவும் அதன் பின்னர்தான் அவரிடம் கதை சொல்ல முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

அதாவது அந்த பேட்டியில், " துப்பாக்கி படத்தின்போது அவரும் நானும் நன்றாகவே பழக ஆரம்பித்துவிட்டோம். நான் டிமான்டி காலனி படம் முடிந்ததும், விஜய் சாரைப் போய்ப் பார்த்தேன். அவர், டிமான்டி காலனி படம் ஹிட் ஆமே. வாழ்த்துகள் அஜய் அப்படினு சொன்னார். உடனே விஜய் சாரை படம் பார்க்க கூப்பிட்டேன். அவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்து படம் பார்த்தார். அவருக்காக ஸ்பெஷல் காட்சி திரையிட்டோம். படம் பார்த்ததுவிட்டு, படம் நல்லா இருக்கு அஜய். கதை இருந்தா சொல்லு நாம சேர்ந்து வேலை பார்க்கலாம் எனக் கூறினார்.
விஜய்: நான் என்னிடம் இருந்த இமைக்கா நொடிகள் படத்தின் கதையை ஓரமாக வைத்துவிட்டு, அவருக்கென 6 மாதங்கள் செலவு செய்து அந்த கதையை உருவாக்கினேன். அவரிடம் அந்த கதையைச் சொன்னபோது, அந்த ஜானரில் அப்போதைக்கு விஜய் சார் படம் செய்ய விரும்பவில்லை. அதன் பின்னர், இமைக்கா நொடிகள் படத்தினை அதர்வாவை வைத்து இயக்கிவிட்டு, படம் ரிலீஸ் ஆன பின்னர் மீண்டும் விஜய் சாரைப் போய் பார்த்தேன். விஜய் சார், படம் ஹிட் ஆமே அஜய். வாழ்த்துகள் எனக் கூறினார். அவரைப் படம் பார்க்க அழைத்தேன். தனது மகன் மற்றும் குடும்பத்துடன் வந்து படம் பார்த்தார். படம் பார்த்துவிட்டு படம் நல்லா இருக்கு, கதை இருந்தால் சொல், சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னார்.

நடுக்கம்: நானும் 3 மாதங்கள் செலவு செய்து ஒரு கதையை உருவாக்கிக்கொண்டு அவரிடம் போனேன். நான் செய்த தவறு என்னவென்றால், முதலில் விஜய் சாருக்கு என்னால் கதை சொல்ல முடியாது என்பதால், இன்னொருவரை அழைத்துச் சென்றேன். ஆனால் அவர் என்னை விட நடுங்கி கதையைச் சரியாக சொல்லவில்லை. இரண்டாவது முறை கதை சொல்லும்போது நானே எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதை சொல்லப் போனேன். விஜய் சார் எனக்கு அவரே காஃபி கொண்டு வந்து கொடுத்தார்.
பயம்: நான் கதை சொல்ல ஆரம்பித்ததும் என்னுள் இருந்த பயம் வெளியே வந்து சரியாக கதை சொல்ல முடியவில்லை. நான் சிறுவயதில் இருந்தே விஜய் சாரை உயரத்தில் வைத்துப் பார்த்தே பழக்கப்பட்டுவிட்டதாலும் அவருடைய தீவிர ரசிகராக இருந்ததாலும் என்னால் அவருக்கு கதை சொல்ல முடியவில்லை. இந்த லட்சணத்தில் கதை சொன்னால் அவர் எப்படி ஓ.கே. சொல்வார்" என அந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











