எதிர்பாராத மிரட்டல் எதிர்நோக்கி வருது.. ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் ஷூட் ஓவர்.. ரிலீஸ் எப்போ?
சென்னை: 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துவரும் நிலையில், இப்படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தனது கருத்தைப் பகிர்கையில், "திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவை மட்டுமே ஒரு இயக்குநரை முழுமையானவராக்காது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு திரைப்படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்புமே மிக முக்கியமானவை," என்று குறிப்பிட்டார். 'டிமாண்டி காலனி 3' பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல், மால்டா, லே-லடாக், சென்னை மற்றும் மேலும் பல வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

பெரிய நடிகர் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது சவாலாக இருக்கும் என்பதால், கால அவகாசத்தையும் பட்ஜெட்டையும் நீட்டிக்கத் தான் தயாராக இருந்ததாகவும் சுதன் சுந்தரம் தெரிவித்தார். இருப்பினும், இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ஆழ்ந்த அர்ப்பணிப்புடன், திட்டமிட்ட 80 நாட்களுக்குள்ளேயே படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார் என்று அவர் பாராட்டினார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இதுபற்றிப் பேசுகையில், "படத்தின் கதையை தயாரிப்பாளர் சுதன் சாருக்கு விவரித்தபோது, தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும், அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என்றும் கூறினார். 'டிமாண்டி காலனி' போன்ற ஒரு பிரான்சைஸூக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் அமைந்தது மிகுந்த அதிர்ஷ்டம்," என்றார். படப்பிடிப்பில் பல சவால்கள் இருந்தபோதிலும், படக்குழுவினரின் முழு ஆதரவால் அவற்றையெல்லாம் எளிதாகக் கடந்து வர முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
மூன்றாம் பாகத்தை மிகவும் திருப்தியுடன் படமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட இயக்குநர், நடிகர் அருள்நிதியின் அர்ப்பணிப்பான உழைப்பும், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புமே திட்டமிட்ட 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிப்பதற்கு முக்கியக் காரணம் என்று புகழ்ந்தார். 'டிமாண்டி காலனி' தொடர் மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்த கோடையில் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்குப் படத்தை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் அஜய் ஞானமுத்து மேலும் கூறினார்.
இந்த திரைப்படத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குமரேஷ் டி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ள 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் சம்மரில் உலகெங்கும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications











