கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநரிடமே கைவரிசை.. பரபரப்பு புகார் அளித்த எஸ்டிஆர் 48 இயக்குநர்!
சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள எஸ்டிஆர் 48 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், தேசிங் பெரிய சாமியிடம் பண மோசடி செய்திருப்பதாக புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
சினிமாவில் தினம்தோறும் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு பல லட்சங்கள் செலவாகி வருகின்றன. அதிகமாக பணம் புழங்கி வரும் இடம் என்பதால் மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பல சினிமா பிரபலங்களும் திடீரென தங்கள் மேனேஜர்களை மாற்றுவதற்கான காரணம் பண மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தான் எனக் கூறுகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வேலை பார்த்தவர்களே கைவரிசை காட்டிய சம்பவங்கள் எல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் தேசிங்கு பெரியசாமிக்கும் நடந்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: கடந்த 2020-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரிது வர்மா, விஜே ரக்சன் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை அறிமுகம் இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்கியிருந்தார். கொள்ளையடிக்கும் ஹீரோ எப்படி கடைசிவரை சிக்காமல் தப்பிக்கிறான் என்பதுதான் அந்த படத்தின் கதையாகவே இருந்தது.
ரஜினிகாந்துக்கு படம்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பார்த்து பிடித்துப் போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தனக்கு ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்யும்படி உத்தரவிட்டார். ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்டமாக படம் எடுக்க வேண்டும் என நினைத்த தேசிங் பெரியசாமி உருவாக்கிய கதையைப் பார்த்த ரஜினிகாந்த் இது இன்னொரு கோச்சடையான் போல பட்ஜெட்டை இழுத்து விடுமோ என்கிற அச்சத்தால் அந்தப் படத்தை வேண்டாம் என தவிர்த்து விட்டார் என தகவல்கள் வெளியாகின.
எஸ்டிஆர் 48: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் வேண்டாமென கைவிட்ட கதையில் நடிகர் சிம்பு எஸ்டிஆர் 48 படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக உள்ள நிலையில் இன்னமும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் இருக்கிறது.
3 லட்சம் மோசடி: இந்நிலையில், இயக்குநர் தேசிக பெரியசாமி தன்னிடம் 3 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக போலீசுக்கு புகார் ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய உதவி இயக்குநரான முகமது இக்பால் என்பவர் பணத்தை கொள்ளை அடித்து விட்டதாக தேசிங் பெரியசாமி புகார் அளித்துள்ளார். தேசிங் பெரியசாமியின் உதவி இயக்குநரான முகமது இக்பால் தலைமறைவாகி விட்டதாகவும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











