இரண்டாம் பாகம் எடுக்கும் விஜய் பட இயக்குநர்?.. அட ஹீரோ அவர்தானா?.. செம காம்போ
சென்னை: விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களை எடுத்தவர் எழில். கடந்த சில காலமாகவே சினிமா எதுவும் எடுக்காமல் அமைதியாக இருந்துவந்தார். இந்த சூழலில் தனது கரியரில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல வருடங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர்சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடித்தார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக களவாணியில் விமலின் நடிப்பு ரொம்பவே ரசிக்கப்பட்டது. முதல் பட ஹீரோ மாதிரியே நடிக்கவில்லை அவ்வளவு இயல்பாக நடிக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

வாகை சூடிய விமல்: களவாணியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சற்குணத்துடன் இணைந்த விமல் வாகை சூட வா படத்தில் நடித்தார். கல்வியை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் விமல். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக விமலின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதுவரை விமலின் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது. பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன.
விமலின் ரீ என்ட்ரி: சில காலம் நடிக்காமல் இருந்த விமல் விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
விமலின் படங்கள்: விலங்கு வெப் சீரிஸ் கொடுத்த வெற்றியை அடுத்து உற்சாகமான விமல் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். அந்தவகையில் அவரது நடிப்பில் தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதனையடுத்து துடிக்கும் கரங்கள் படமும் வெளியாகியது. ஆனால் நல்ல ரெஸ்பான்ஸ் படத்துக்கு கிடைக்கவில்லை.
பல கையெழுத்து: இதற்கிடையே துடிக்கும் கரங்கள் படத்தின் விழாவில் பேசிய விமல் சினிமாவுக்கு வந்த புதிதில் என்ன ஏது என்றே தெரியாமல் பல கையெழுத்தை போட்டேன் என்று பேசினார். மேலும் இனி தெளிவாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் விமலின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
தேசிங்கு ராஜா 2: அதாவது எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2013ஆம் வருடம் வெளியான திரைப்படம்தான் தேசிங்கு ராஜா. காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. இதிலும் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜிதா பொனாடாவும், ஹர்ஷிதாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வித்யாசாகர் நீண்ட காலத்துக்கு பிறகு இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











