அடேங்கப்பா நடிக்க வருவதற்கு முன்பு இத்தனை வேலைகள் பார்த்தாரா?.. விஜய் சேதுபதி பற்றி தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார். அதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்னென்ன வேலைகள் செய்தார் என்பது குறித்து பார்க்கலாம்.
சினிமாவில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பலரும் முட்டி மோதுவதுண்டு. அந்த வெற்றியை பெறுவதற்கு பொறுமை, திறமை, விடாமுயற்சி வேண்டுமென்பதற்கு விஜய் சேதுபதிதான் மிகச்சிறந்த உதாரணம். சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளைக்கூட உதாசீனப்படுத்தாமல் பொறுமையாக இருந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டவர் அவர். அந்தப் பொறுமைக்கும், திறமைக்கும் மதிப்பாக தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர் ஹிட்டுகள்: அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் கிடைத்தது. பெயர் மட்டுமில்லாமல் அந்தப் படத்துக்கு பிறகு ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தன. அதிலும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்து சினிமாவுக்கு வந்த கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி உள்ளிட்டோர் எல்லாம் முதல் படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைத்தார்கள். அப்படி அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாகின.
முன்னணி ஹீரோ: தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்ததன் காரணமாக விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். நிலைமை இப்படி இருக்க வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என வில்லன் ரோலினை ஏற்று அதிலும் தனி முத்திரை பதித்தார். ஆனால் வில்லனாக மட்டுமே நடிக்கக்கூடாது ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருந்தனர்.
மகாராஜா: ரசிகர்களின் கோரிக்கைப்படி மீண்டும் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறி அந்த வழியில் பயணிக்கிறார் சேது. அப்படி தனது 50ஆவது படமான மகாராஜாவில் ஹீரோவாக நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார். சூழல் இப்படி இருக்க சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி ஏகப்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார்.
என்னென்ன வேலைகள்: அதாவது சென்னையில் கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்த அவர் சினிமாவுக்கு ஆரம்பத்தில் முயற்சி செய்தபோது அவருக்கு கதவுகள் திறக்கவில்லை. நம்மவர் படத்தின் ஆடிஷனிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒருகட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக வேறு வேலைகள் செய்ய முடிவெடுத்தார். அப்படி அவர் முதலில் சேல்ஸ்மேன் வேலையை செய்த அவர் அடுத்ததாக ஃபோன் பூத் ஆபரேட்டராக மாறினார். பிறகு ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிக்கு சேர்ந்தார்.
துபாய் பயணம்: இங்கு அவர் பார்த்த வேலைகள் சரியாக இல்லாததன் காரணத்தால் துபாய்க்கு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் சில வருடங்கள் கணக்காளராக பணியாற்றினார். இருந்தாலும் சினிமா ஆசை சேதுவை விடவே இல்லை. பிறகு வேலையை விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்த அவர் இண்டிரியர் டெக்கரேஷன் பணியை செய்துவிட்டு சென்னையில் இருக்கும் கூத்து பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கேயே நடிகராகவும் மாறினார். அங்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு சினிமாவுக்குள் வந்து இன்று வெற்றிகரமான நடிகராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











