Deva - தயாரிப்பாளருக்கும் யேசுதாஸுக்கும் ஸ்டூடியோவில் சண்டை.. ஹார்மோனியத்தோடு தேவா எடுத்த ஓட்டம்
சென்னை: Deva (தேவா) தயாரிப்பாளருக்கும், பாடகர் யேசுதாஸுக்கும் ஸ்டூடியோவில் நடந்த பெரும் சண்டையை பார்த்த தேவா ஹார்மோனியத்துடன் ஓட்டம் எடுத்திருக்கிறார்.
இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோதும் தேவாவின் கொடியும் உயரவே பறந்தது.

முன்னணி ஹீரோக்கள்: 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல் அப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா என அனைவரது படங்களுக்கும் தேவா இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இசையும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அத்தனையும் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் தொடர்ந்து தேவாவுக்கு வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
தேவா பேட்டி: சமீபத்தில் நடந்த தேவாவின் இசை கச்சேரிக்குக்கூட எக்கச்சக்கமான ரசிகர்கள் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எனது இசையமைப்பில் ஒரு படத்துக்காக யேசுதாஸ் பாட வந்தார். அந்தப் பாடலுக்கான வரிகளை கவிஞர் சொல்ல சொல்ல யேசுதாஸ் எழுதிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு வார்த்தை தவறாக எழுதப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தக் கவிஞர் மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொன்னார்.
கோபத்தில் யேசுதாஸ்; இதனால் கோபமடைந்த யேசுதாஸ் அந்த கவிஞரிடம் நீ எழுந்து வெளியே போ என்று சொல்லிவிட்டார். பிறகு படத்தின் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் வந்து யேசுதாஸ் அருகில் அமர்ந்தார். அப்போது யேசுதாஸ் என்னிடம் சுருதி என்னவென கேட்டார். நானும் சொல்ல சொல்ல அவரும் பின் தொடர்ந்து பாடிக்கொண்டே வந்தார். இதற்கிடையே அந்த பாடலின் ட்ராக்கை தயாரிப்பாளர் எனது குரலில் ஏற்கனவே கேட்டிருந்தார். இப்போது யேசுதாஸ் ஒரு இடத்தில் தவறு செய்ய தயாரிப்பாளர் அந்த இடத்தில் திருத்தம்சொன்னார்.
நீ யாரு?: இதனால் மேலும் கோபமடைந்த யேசுதாஸ் பிரபாகரனிடம் நீ யாரு என கேட்டார். அவரோ தயாரிப்பாளர் என்று சொல்லாமல் தேவாவின் உதவியாளர் என்று சொல்லிவிட்டார். அது மேலும் யேசுதாஸை கோபப்படுத்த வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. யேசுதாஸ் அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி விட்டெறிந்துகொண்டிருந்தார். நான் ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு ஆறு வருடங்கள் எனது இசையில் அவர் பாடாமல் இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











