Devara First Review: தேவரா முதல் விமர்சனம்.. அட போட்டிருப்பது யாருன்னு பாருங்க.. நம்ம அனிருத்!
சென்னை: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இப்படியொரு ட்வீட் போடவில்லை என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தனர். அந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் தோல்வியைத் தழுவியது. ஆனால், இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்துக்கு அனிருத் இப்பவே வெற்றி கோப்பைகளை அடுக்கி தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தேவரா படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 27ம் தேதி கார்த்தியின் மெய்யழகன் படத்துக்குப் போட்டியாக பான் இந்தியா ரிலீஸாக தேவரா வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு அனிருத் கொடுத்துள்ள முதல் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
தேவரா பட்ஜெட்: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அரெஸ்ட் ஆன ஜூனியர் என்டிஆர் ஆஸ்கர் வரை சென்று நாட்டுக் கூத்து பாடல் மூலம் அசத்தி விட்டார். ராம்சரண் உடன் இணைந்து அந்த படத்தில் நடித்திருந்த நிலையில், 6 வருடத்துக்குப் பிறகு சோலோ ரிலீஸ் படம் தேவரா தான் என அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். சென்னை, ஹைதராபாத், மும்பை என புரமோஷனை பக்காவாக செய்துள்ளார். தேவரா படத்தின் பட்ஜெட் மட்டும் 300 கோடி ரூபாய் என்கின்றனர். 500 முதல் 600 கோடி வசூல் வந்தால் தான் படம் லாபகரமாக படமாக மாறும் என்கின்றனர்.
நிகழ்ச்சி ரத்து: மும்பை, சென்னையில் எல்லாம் எந்தவொரு பஞ்சாயத்தும் இல்லாமல் நடைபெற்ற தேவரா புரமோஷன் நேற்று ஹைதராபாத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்ட நிலையில், ஜூனியர் என்டிஆரை காண அந்த ஹோட்டலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் ரசிகர்கள் நிரம்பி வழிந்து விட்டனர். அதன் காரணமாகவே ஜூனியர் என்டிஆரால் நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் நிகழ்ச்சி ரத்தாகி விட்டது. கோபத்தில் ரசிகர்கள் ஹோட்டலையே அடித்து நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இந்த கூட்டத்தை தியேட்டருக்கு கொண்டு வாங்க என ஜூனியர் என்டிஆரும் நல்லா கொம்பு சீவி விட்டுள்ளார்.
அனிருத் விமர்சனம்: இசையமைப்பாளர் அனிருத் முதன் முதலில் தெலுங்கில் இசையமைப்பாளராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தேவரா படத்துக்கு அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அனிருத் போட்ட பழைய பாடல்கள் போல சில பாடல்கள் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால், அதையெல்லாம் தாண்டி தற்போது அனிருத் தேவரா படத்துக்கு 3 வெற்றிக் கோப்பை எமோஜிக்களையும், 3 கைதட்டும் எமோஜிக்களையும், 3 ஃபயர் கிராக்கர்களையும் வெடிக்க வைத்து படம் பக்கா மாஸ் ஹிட் என்பதை விமர்சனமாக கொடுத்துள்ளார்.
விடாமுயற்சிக்கும் இதே மாதிரி: தேவரா படத்துக்கு அனிருத் இப்படிப் போட்டுள்ளதை பார்த்த அஜித் ரசிகர்கள் சீக்கிரமே விடாமுயற்சி படத்துக்கும் இப்படி ஏதாவது போட்டு விடுண்ணா என கமெண்ட் பக்கம் முழுவதும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அனிருத் பிஜிஎம் மற்றும் பாடல்களால் தான் விடாமுயற்சி படம் இன்னமும் தாமதமாகி வருவதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஷங்கர் செக்?: தேவரா படத்தின் டிரெய்லரில் மீன்களில் எல்லாம் ஏறி அவதார் போல தேவரா ஜூனியர் என்டிஆர் சவாரி பண்ணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல பல ஸ்டன்ட் சீன்களும் வேள்பாரி கதையில் வருவதை போல இருப்பதாக கூறுகின்றனர். ஷங்கர் தேவரா படத்துக்கு எதிராக அந்த ட்வீட்டை போட்டாரா? அல்லது சூர்யாவின் கங்குவா படத்தில் பாம்பை அம்பாக பயன்படுத்தி எதிரிகளை கொல்லும் காட்சிகளுக்காக அப்படியொரு ட்வீட்டை போட்டுள்ளாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. வெளிப்படையாக ஷங்கர் இரண்டில் எந்த படத்துக்கு சொன்னார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











