Mari Sevaraj vs Kamal Haasan: மீண்டும் தேவர்மகனை பார்க்க வைத்த மாரி செல்வராஜ்.. பறக்கும் ட்ரோல்கள்!
சென்னை: 30 வருஷத்துக்கு முன்பாக வந்த கமல்ஹாசனின் தேவர்மகன் படம் தந்த வலி தான் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களை எடுக்க வைத்தது என மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் கமல் முன்னிலையில் பேசிய பேச்சு சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ளது.
தேவர்மகன் பார்த்தவர்கள் இசக்கியை என்றுமே தாழ்ந்த சாதியாக நினைக்கவில்லை என்றும் நீங்கள் சொன்ன பின்னர் தான் எங்களுக்கே தெரிகிறது என மாரி செல்வராஜை விளாசி வருகின்றனர்.
மாமன்னன் படத்தை பார்க்க வைக்க இப்படியொரு ப்ரமோஷன் யுத்தியை மாரி செல்வராஜ் கிளப்பி உள்ளார் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மீண்டும் டிரெண்டான தேவர்மகன்: தேவர்மகன் படத்தின் கிளைமேக்ஸில் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா போங்க என கமல் கத்தியை பிடிங்கிய நிலையில், கர்ணன் படத்தில் போலீஸ் தலையை வெட்டுங்க என மாரி செல்வராஜ் கத்தியை கையில் கொடுத்துள்ளார் என சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவி வருகின்றன.
தேவர்மகன் படத்தையே மறந்து போன ஜெனரேஷனுக்கு மீண்டும் தேவர்மகன் படத்தை பார்க்கத் தூண்டிய மாரி செல்வராஜின் பேச்சுக்கு நன்றி என கமல் ரசிகர்கள் கமெண்ட் போட்டு தாக்கி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் vs கமல்ஹாசன்: விஜய், அஜித் ரசிகர்கள் சண்டையை ஓரங்கட்டி விட்டு மாரி செல்வராஜ் vs கமல்ஹாசன் ரசிகர்கள் சண்டை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் மட்டுமே இப்படி புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் இப்போதும் சாதிய விதையை படங்கள் மூலமாக விதைப்பது மாரி செல்வராஜ் போன்றவர்கள் செய்யும் மோசமான செயல் தான் என ட்ரோல்கள் பறக்கின்றன.
மனுஷனா இருக்கிறது தான் முக்கியம்: கமல்ஹாசன் செய்தது தான் தவறு என்றும் அதை தைரியமாக அவர் முன்னிலையிலேயே சுட்டிக் காட்டி அவரது முகத்திரையை கிழித்து இருக்கிறார் மாரி செல்வராஜ் என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வர சோஷியல் மீடியாவே கலவர பூமியாக மாறியுள்ளது.
தேவனா இருக்கிறது முக்கியமா? மனுஷனா இருக்கிறது முக்கியமா என தேவர்மகன் படத்திலேயே கமல் நாசரிடம் பேசும் வசனத்தை எல்லாம் மாரி செல்வராஜ் பார்க்காமல் தூங்கிட்டாரா என கமல் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மாமன்னன் படத்துக்கு சிக்கல்: மாரி செல்வராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசியது மாமன்னன் படத்தை ஒரு சாரார் பார்க்கவே முடியாதது போல மாற்றி உள்ளதாகவும், சாதிய ரீதியிலான படங்களை எடுப்பவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்றே நெட்டிசன்கள் ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
இதனால், இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ள மாமன்னன் படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்களில் ஒட்டுமொத்த மக்களையும் தியேட்டருக்கு வர வைக்குமா? அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது. மாமன்னன் படத்தை விமர்சிக்கவும் கமல் ரசிகர்கள் தீவிரமாக தயாராகி உள்ளனர் என்றும் கூறி வருவதால் படத்திற்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











