புஷ்பா 2 தயாரிப்பாளரை விளாசிய தேவிஸ்ரீ பிரசாத்.. காரணம் அஜித்தின் குட் பேட் அக்லியா?.. புது பரபரப்பு
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது புஷ்பா 2 திரைப்படம். இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆனால் இடையில் சில பிரச்னை காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னணி இசைக்கு தமன் ஒர்க் செய்கிறார் என்று தகவல் வெளியான சூழலில்; அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தமிழில் அவர் சச்சின், வீரம், மாயாவி, கந்தசாமி, உனக்கும் எனக்கும், கங்குவா, மன்மதன் அம்பு, வில்லு என ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியான இசையமைப்பாளராகவே வலம் வருகிறார். இப்போது அனிருத் வாங்கியிருக்கும் ராக் ஸ்டார் என்ற பட்டதை தேவிஸ்ரீ பிரசாத் அவருக்கு முன்னதாகவே வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா: தேவிஸ்ரீ பிரசாத்தை உச்சத்துக்கு கொண்டு சென்ற படங்களில் புஷ்பா படத்தின் முதல் பாகத்துக்கு தனியிடம் உண்டு. அந்தப் படத்தில் அவர் இசையமைத்த ஊ சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். அதேபோல் அந்தப் படத்தில் அவர் பின்னணி இசையையும் நன்றாகவே கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி புஷ்பா படத்துக்காக அவர் தேசிய விருதையும் பெற்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் கடைசியாக கங்குவா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
விமர்சனம் சந்தித்த பிரசாத்: கங்குவா படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் படத்தில் மோசமான விமர்சனங்களை சந்தித்த டிப்பார்ட்மெண்ட்டில் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் ஒன்று. படத்தில் இசையே இல்லை வெறும் சத்தம் மட்டும்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள். சூழல் இப்படி இருக்க இப்போது அவர் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்துக்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாகம் போல அவருக்கு இதிலும் நல்ல பெயர் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரச்னை: சூழல் இப்படி இருக்க புஷ்பா 2 பட இசை பணியின்போது அவருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் பிரச்னை வெடித்ததாக கூறப்பட்டது. அது நேற்று சென்னையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அப்பட்டமாக தெரிந்தது. மேடையில் பேசிய தேவிஸ்ரீ பிரசாத், "நான் நேரத்துக்கு பாடல் தரவில்லை, பின்னணி இசையை தரவில்லை என்று தயாரிப்பாளர் கோபித்துக்கொள்வார். அவருக்கு என் மேல் அன்பு இருக்கிறது. இப்போதுகூட இந்த நிகழ்ச்சிக்கு நேரத்துக்கு வரவில்லை என்று நினைத்திருப்பார். சார் நான் 20 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால் வெளியே இருந்தவர்கள்தான் என்னை உடனடியாக உள்ளே விடாமல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள்" என்று கூறினார்.
முற்றிய சண்டை: இதற்கிடையே அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று நேற்று தகவல் பரவியது. அதற்கு காரணமே புஷ்பா 2 படத்தின்போது தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடந்த பிரச்னைதான் என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்திலிருந்து நீக்கப்படுகிறீர்கள் என்று அவரிடம் நேரடியாக நேற்று சொல்லப்பட்டுவிட்டதாகவும்; அந்த கோபத்தில்தான் புஷ்பா 2 மேடையில் வைத்து தயாரிப்பாளரை தேவிஸ்ரீ பிரசாத் செய்துவிட்டார் என்றும் தகவல்கள் கசிந்துவருகின்றன.


Click it and Unblock the Notifications