நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்.. கவுண்டமணி ஜோடிக்கு வந்த மோசமான நிலைமை.. உதவிய தக்ஷன் விஜய்
சென்னை: முன்னணி நடிகர்களை தவிர்த்து சினிமாவில் துணை நடிகர்களின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. சமீப காலமாக சில முன்னணி நடிகர்களுக்கே பட வாய்ப்புகள் கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சில நடிகர்கள் மதுவுக்கும் போதை வஸ்த்துவுக்குமே அடிமையாகி விடுகின்றனர்.
காமெடி நடிகர்களுடன் துணையாக நடித்த பலரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சோகத்தையும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட படங்களில், கவுண்டமணி, செந்தில் ஜோடியாகவும், 'காதல்' படத்தில் சந்தியாவுக்கு அம்மாவாகவும் நடித்த காதல் மல்லேஸ்வரி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 22 நாட்களாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைக்கேள்விப்பட்ட நடிகர் தக்ஷன் விஜய், முதல் ஆளாக மருத்துவமனைக்குச் சென்று உதவினார். தன்னைச் சந்தித்ததும், "நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்" என்று கண்ணீர் மல்கக் கதறிய மல்லேஸ்வரியைப் பார்த்ததும், தக்ஷன் விஜய்யும் கண் கலங்கினார்.
மல்லேஸ்வரிக்கு ஆறுதல் கூறிய தக்ஷன் விஜய், பெருந்தொகை அளித்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். திரைத்துறையினர் தனக்கு உதவ வேண்டுமென்று காதல் மல்லேஸ்வரி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற சினிமா பிரபலங்களும் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வேண்டி கோரிக்கை விடுத்துள்ள மல்லேஸ்வரிக்கு உதவி செய்ய வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











