Raayan: ராயனை பார்த்து பார்த்து செதுக்கிய தனுஷ்! திரையரங்கில் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் (Raayan) படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கின்றது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக இந்த படத்தினை வரவேற்றுள்ளனர்.

குறிப்பாக தனுஷின் 25வது படம் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த படமும் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் தரப்பில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு இன்று காலை 6 மணிக் காட்சிகள் திரையிடப்பட்டது. படத்தைக் காண அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்க வாயிலில் திரண்டு இருந்தனர்.

செல்ஃபி பாயிண்ட்: குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஐ லவ் தனுஷ் 50 என்ற செல்ஃபி பாய்ண்ட் ரசிகர்கள் தரப்பில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தியேட்டரின் வாசலில் தியேட்டர் உயரத்திற்கு தனுஷின் ராயன் படத்திற்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்து படம் பார்க்க தியேட்டருக்குள் சென்றுள்ளனர். சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும், ஹைதராபாத்தில் ராயன் படத்திற்கான புரோமோசன் நடத்தப்பட்டிருந்தது.

ஹவுஸ் ஃபுல்: அதேபோல் பெங்களூரில் திரையிடப்பட்ட தியேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் காட்சி என ரசிகர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் படம் பார்க்க தியேட்டருக்குள் சென்றவர்கள் படத்தின் டைட்டில் கார்டு போடும்போது தனுஷ் பெயர் திரையில் தோன்றியதை வீடியோவாக எடுத்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இடைவேளை: அதேபோல் படத்தின் இடைவெளி காட்சியை படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் பலர் இடைவேளை காட்சி சண்டையை தங்களது மொபைலில் பதிவு செய்து தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் இவ்வாறு செய்வது என்பது சட்டப்படி குற்றம். படக்குழு தரப்பில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டால் ரசிகர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோல் யாரும் ஈடுபட வேண்டாம்.


Click it and Unblock the Notifications











