Raayan: செல்வராகவன் மட்டும்தான்! உச்சம் தொட வேண்டிய ராயன் கோட்டைவிட்ட இடங்கள்!
சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு தனுஷின் தீவிர ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் ஜென்ரல் ஆடியன்ஸ் எனப்படும் பொதுமக்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு படம் வெற்றிப்படமாக மாறவேண்டும் என்றால் அந்த நடிகரின் ரசிகர்கள் பட்டாளத்தைக் கடந்து பொதுமக்களால் கொண்டாடப்பட வேண்டும். அப்படி தனுஷ் எங்கெல்லாம் கோட்டை விட்டார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
படத்தின் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு வன்முறை. குறைந்த பட்சம் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும் கொலை நடந்துகொண்டே இருக்கின்றது. இது படத்திற்கு தேவை என இயக்குநர் நினைத்திருந்தாலும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் இத்தனை கொலைகளைச் செய்யும் தனுஷ், இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. தனது தம்பிகளைக் காப்பாற்ற வன்முறையில் இறங்கினாலும் இறுதியில் தனது தம்பிகளிடமே குத்துப் படுகின்றார். இறுதியாக தனது தங்கைக்காக வன்முறையில் இறங்குகின்றார்.

அப்பா மாதிரி ரெஸ்பெக்ட் எனக்கூறும் தம்பியே தனுஷை குத்துவது படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் மீது இருந்த பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அந்த காட்சிக்குப் பின்னர் தியேட்டரில் பெரும்பாலான ஆடியன்ஸ் தங்களது மொபைலில் முழ்கிவிட்டனர். முழுக்க முழுக்க வன்முறைக் காட்சிகளால் படத்தை எடுக்க தீர்மானித்த தனுஷ், தனது தம்பிகள் மற்றும் தங்கையைக் காப்பாற்றுவதற்காகவே சண்டை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றினார் என இருந்திருந்தாலாவது ரசிகர்களுக்கு ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்.
எடுபடாத எமோஷன்: ஆனால் தம்பி அண்ணனைக் குத்துவது, மூத்த அண்ணனைக் குத்திய இளைய அண்ணனை தங்கை குத்திக் கொலை செய்வது என படம் எமோஷனலாகவும் வொர்க்-அவுட் ஆகாமல் போய்விட்டது. ஏ.ஆர். ரகுமான் குரலில், உசுரே நீதானே என்ற வரிகளைப் பாடும்போது தனுஷ் மற்றும் துஷாரா விஜயனை திரையில் காட்டாமல் போயிருந்தால் அவர்களுக்கு இடையிலான பாசப் பிணைப்பு வொர்க்-அவுட் ஆகாமலே போயிருக்கும்.

போர் அடித்த வன்முறை: தமிழ் சினிமாவில் அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் இடம் பெற்ற படங்கள் இதற்கு முன்னரும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் அந்த படங்களில் ரசிகர்களுக்கு நிறைவான திருப்தியைக் கொடுத்துள்ளது. உதாரணத்திற்கு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு வன்முறைக் காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தாமல் போர் அடிக்கச் செய்துவிட்டதால், "இப்ப என்ன அவன குத்தப்போற.. அதுதானே" என்ற மனநிலைக்கு தள்ளிவிட்டார் தனுஷ். காவல்துறையில் உயர் அதிகாரியாக வரும் பிரகாஷ் கதாபாத்திரம் திரையில் வைத்ததற்கு பதிலாக திரைக்கு வெளியே ஆடியன்ஸாகவே வைத்திருக்கலாம் எனக் கூறும் அளவிற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது.

செல்வராகவன்: படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலான ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்திய கதாபாத்திரம் என்றால் அது, சேகர் என்ற கதாபாத்திரத்தில் வந்த செல்வராகவன்தான். செல்வராகவனின் கதாபாத்திரம், அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்தின் மரணம் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சரவணன் ஏற்று நடித்த துரை கதாபாத்திரமும் பாராட்டுக்குரியதுதான். மற்ற கதாபாத்திரங்கள் கொல்லப்படும்போது செமயா ஸ்கெட்ச் போட்டு தூக்குனான்ப்பா, அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தில் திரைக்கதையின் உச்சம்ப்பா இது என சொல்லும் அளவிற்கு படத்தில் எதுவுமே இல்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தாக்கத்தை கதைக்குள் தங்களது நடிப்பின் மூலம் நடிகர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

வசூல்: இன்றைக்கு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது படத்தின் வசூல்தான் என்பதால், ராயன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகின்றது. படத்தின் வசூல் முதல் மூன்று நாட்களில் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் நான்காவது நாளான நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்தின் வசூல் குறைந்தது. ஆகஸ்ட் 15வரை மிகப்பெரிய படங்களின் ரிலீஸ் இல்லாததால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவுக்காவது வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கலாமே தவிர காத்தவராயன் கதையில் காத்து வாங்குகின்றது என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











