நீ ஜெயிச்சுட்ட ராயா! இயக்குநராக வசூலில் கெத்து காட்டிய தனுஷ்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகள்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தனுஷின் 50வது படம். தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிக் காணப்படுவதால் சென்சார் போர்டு தரப்பினர் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கினர். ராயன் படம் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பாக இங்கு பார்க்கலாம்.
படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளது எனக் கூறும் அளவிற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினர்.

படத்தினை அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று திரையிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் அதிகாலை 6 மணிக் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். படம் முடிந்த பின்னர் பால்கனியில் இருந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். தனுஷைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். ரசிகர்கள் ராயன் படத்தைக் கொண்டாடியதைப் பார்த்த தனுஷ் தனது இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது நெற்றிக்கு நேராக சில வினாடிகள் கையெடுத்து கும்பிட்ட தனுஷ் கிட்டத்தட்ட எமோஷனல் ஆகிவிட்டார்.

வெற்றி: இந்நிலையில் படத்திற்கு பெரும்பாலும் நல்ல ரெஷ்பான்ஸ் வந்து கொண்டு இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக படத்தின் இசை மற்றும் சண்டைக் காட்சிகளுக்காக பல விமர்சகர்களும் படம் பார்த்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இயக்குநராகவும் தனுஷ் வெற்றி பெற்றுள்ளார் என பலர் கூறுகின்றனர். நடிகராக தனது 50வது படத்தில் தனுஷ் வெற்றி பெற்றுள்ளார் என்றும் பலர் கூறுகின்றனர்.

முதல் நாள் வசூல்: ராயன் படத்தின் ப்ரீ சேல் டிக்கெட் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக முன்னரே செய்திகள் வெளியானது. அதே போல உலகம் முழுவதும் 6 கோடி ரூபாய்க்கு ப்ரீ சேல் டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து, சுமார் ரூபாய் 12.5 கோடிகள் வசூல் செய்திருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் தொடர்பாக செய்திகளை வெளியிடும் வலைதளங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

100 கோடி வசூல்: மேலும் இந்த முதல் நாள் வசூல் என்பது தனுஷின் முந்தய படங்களான கேப்டன் மில்லர், திருச்சிற்றம்பலம், கர்ணன் ஆகிய படங்களின் வசூலை விட அதிகம். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாலும் ஆகஸ்ட் 15வரை மிகப்பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும் ராயன் படம் 100 கோடி வசூலை அசால்ட்டாக எட்டிவிடும் என பலர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











