Dhanush: மீண்டும் பாலிவுட் செல்லும் தனுஷ்... இந்தமுறை ரொமான்ஸ் கிடையாது... ஒன்லி ஆக்ஷன்தானாம்!
மும்பை: கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்த தனுஷ் தற்போது மும்பையில் வலம் வருகிறார்.
கேப்டன் மில்லர் முடிந்ததும் சேகர் கம்முலா இயக்கும் படம், D 50 என அடுத்தடுத்து கமிட்டாகியுள்ளார் தனுஷ்.
இதனிடையே மீண்டும் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.
தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இந்தப் படம் குறித்து எக்ஸ்க்ளூசிவான தகவல்கள் கிடைத்துள்ளன.

மீண்டும் பாலிவுட் செல்லும் தனுஷ்: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தென்காசி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் தனுஷ் திடீரென மும்பை பறந்துவிட்டார். புதிய லுக்கில் செம்ம கெத்தாக மும்பை விமான நிலையத்தில் தனுஷ் வலம் வந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகின.
இந்நிலையில் தனுஷ் திடீரென மும்பையில் விசிட் அடித்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டுமே நடித்து வந்த தனுஷை பாலிவுட் பக்கம் அழைத்துச் சென்றவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆனந்த் எல் ராய். ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா என்ற திரைப்படம் மூலம் இந்தியிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் தனுஷ். ராஞ்சனா தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராஞ்சனா படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்ததால், தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்தது. அதன்படி, இக்கூட்டணியில் உருவான அத்ரங்கி ரே திரைப்படம், 2021ம் ஆண்டு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஓடிடியில் வெளியானது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகானும் முக்கியமான ரோலில் அக்ஷய்குமாரும் நடித்திருந்தனர். இந்தப் படமும் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ராஞ்சனா, அத்ரங்கி ரே என இரண்டு படங்களுமே காதல் பின்னணியில் ரொமாண்டிக் ஜானரில் உருவாகின. இதனையடுத்து மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என தனுஷும் ஆனந்த் எல் ராய்யும் முடிவெடுத்துள்ளனர். அதற்கான ப்ரோமோ ஷூட் மும்பையில் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்துகொள்ளவே தனுஷும் மும்பை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் - ஆனந்த் எல் ராய் இணையும் இது பான் இந்தியா படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்தமுறை ரொமான்ஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டதால் விரைவில் இந்தப் படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தின் இசையமைப்பாளர், தனுஷுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் ஷூட்டிங் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் தனுஷ் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











