Dhanush: மிரட்டலாக வெளியானது தனுஷின் Tere Ishk Mein அப்டேட்... பாலிவுட்டில் அடுத்த சம்பவம்
மும்பை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் நடிக்கவுள்ள இந்தி படத்தின் அப்டேட் சர்ப்ரைஸ்ஸாக வெளியாகி வைரலாகியுள்ளது.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் டைட்டில் டீசர்:தனுஷின் லைன்அப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளன. தற்போது அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லரில் நடித்து வரும் தனுஷ், அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல், தனது 50வது படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்ற தனுஷ், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யை சந்தித்தார். தமிழில் வெற்றிமாறன் போல, இந்தியில் தனுஷுக்கு வாழ்வு கொடுத்தவர் ஆனந்த் எல் ராய் தான். இருவரது கூட்டணியில் வெளியான ரஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ரஞ்சனா தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதில் ரஞ்சானா வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால் 10 இயர்ஸ் ஆஃப் ரஞ்சனா என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனுஷ் - ஆனந்த் எல் ராய் இணையும் அடுத்த படத்தின் அப்டேட் அபிஸியலாக வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு தேரே இஷ்க் மெய்ன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தேரே இஷ்க் மெய்ன் டைட்டில் டீசருடன் வெளியான அப்டேட்டால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கியமாக இந்தப் படத்துக்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவான ரஞ்சனா, அத்ரங்கி ரே படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தனுஷ் - ஆனந்த் எல் ராய் இணையும் படத்தின் ப்ரோமோ ஷூட் சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. அதுதான் தற்போது டைட்டில் டீசராக வெளியாகியுள்ளது. இந்த டீசரில் தனுஷ் கையில் ஒரு பாட்டிலும் வாயில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு வெறித்தனமாக ஓடி வருகிறார். நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் அந்த பாட்டிலை வெறித்தனமாக தனுஷ் தூக்கி வீச, அது ஒரு சுவரில் பட்டு படத்தின் டைட்டில் வெளியாகிறது.

முன்னதாக அந்த சுவரில் ரஞ்சனா என வரையப்பட்டுள்ளது. அது மறைந்ததும் தேரே இஷ்க் மெய்ன் என்ற டைட்டில் பையர் ஆகிறது. இந்த டைட்டில் டீசரில் கேப்டன் மில்லரில் வரும் அதே லுக்கில் செம்ம மிரட்டலாக வருகிறார் தனுஷ். அதேபோல், இந்தப் படமும் காதல் பின்னணியில் உருவாகும் என இந்த டைட்டில் டீசரில் தெரிகிறது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் 2024ல் வெளியாகும் எனவும் டைட்டில் டீசரில் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த டைட்டில் டீசரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள தனுஷ், "தனது அடுத்த இந்திப் படம்" என கேப்ஷன் கொடுத்து சின்ன நன்றி அறிக்கையும் வெளியிட்டுள்ளார். சில திரைப்படங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் ரஞ்சனா படத்தை மிகப் பெரிய ஹிட்டாக்கியதற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஞ்சனா உலகில் இருந்து தேரே இஷ்க் மெய்ன் உருவாகிறது எனவும் ட்வீட் செய்துள்ளார். அதேபோல், தேரே இஷ்க் மெய்ன் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











