Dhanush - தனுஷும், ஐஸ்வர்யாவும் பேசிட்டுதான் இருக்காங்க.. பிரபலம் பகிர்ந்த ரகசியம்
சென்னை: Dhanush And Aishwarya (தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா) தனுஷும் ஐஸ்வர்யாவும் தேவைப்படும்போது பேசிக்கொண்டுதான் இருப்பதாக சுப்ரமணியம் சிவா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷுக்கு காதல் கொண்டேன் படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்தப் படத்தின் மூலம்தான் தனுஷுக்குள் மாபெரும் நடிகர் இருக்கிறார் என்பதை கோலிவுட் புரிந்துகொண்டது. அதற்கு பிறகு தனுஷ் கமர்ஷியல், கதை அம்சம் உள்ள படங்கள் என இரட்டை குதிரையில் சவாரி செய்து தற்போது ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி படத்தில் நடித்திருந்தார்.

காதல் கொடுத்த காதல் கொண்டேன்: காதல் கொண்டேன் சிறந்த நடிகர் என்ற பெயரை மட்டும் பெற்றுக்கொடுக்கவில்லை தனுஷுக்கு. அந்தப் படத்தில் நடித்ததற்காக தனுஷை ஐஸ்வர்யா வாழ்த்தியதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மாறி கடந்த 2004ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகனாக மாறினாலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டதால் மட்டுமே அவர் இந்த அளவு வளர்ந்திருக்கிறார் என்பது உண்மை. அதற்கு ஐஸ்வர்யாவும் பக்கபலமாகவே இருந்தார்.
திடீரென பிரிந்த தனுஷும், ஐஸ்வர்யாவும்: தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் கடந்த வருடம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இருப்பினும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தனித்தனி பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என கூறினரே தவிர விவாகரத்து என்று கூறவில்லை. அதுமட்டுமின்றி, விவாகரத்துக்கும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தை நாடவில்லை.

இருவரும் சேர்ந்துவிடுவார்கள்; நம்பிக்கை கொடுத்த தனுஷின் அப்பா: இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்கள். கணவன், மனைவிக்குள் வரும் சண்டை போல்தான் இவர்களுக்குள்ளும் வந்திருக்கிறது என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். மேலும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் ரசிகர்களுக்கு அவர் கொடுத்திருந்தார். எனவே விரைவில் இரண்டுபேரும் சேர்ந்துவிடுவார்கள் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு எழுந்தது.
இரண்டு பேரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்: இந்நிலையில் தனுஷின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான சுப்ரமணியம் சிவா இரண்டு பேர் குறித்து தன்னிடம் சொல்லியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது, தனுஷின் புதிய வீட்டு கிரஹபிரவேசத்தில் இரண்டு மகன்களும் கலந்துகொள்ளவில்லை. எனவே தனுஷும் ஐஸ்வர்யாவும், சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என ஆரூடம் கூறப்பட்டது.

ஆனால், வீட்டு கிரஹப்பிரவேசம் நடந்த அன்றுதான் ரஜினியுடைய அண்ணனின் 80ஆவது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. எனவே அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ரஜினியின் குடும்பத்தினர் சென்றுவிட்டனராம். அதனால்தான் ஐஸ்வர்யாவாலோ, அவரது மகன்களாலோ கிரஹபிரவேசத்தில் கலந்துகொள்ள முடியவில்லையாம். அதேபோல், இரண்டு பேரும் இப்போதுதான் பிரிந்திருக்கிறார்கள். நிரந்தரமாக பிரியமாட்டார்கள். தேவைப்படும்போது அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என சுப்ரமணியம் சிவா தன்னிடம் கூறியதாக அந்தப் பேட்டியில் பயில்வான் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











