தனுஷ் - அனிருத் வெற்றி கூட்டணி உறுதி.. அப்போ ப்ளாக்பஸ்டர் ஹிட் தான்
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், ரசிகர்களால் செல்லமாக ராக்ஸ்டார் எனவும் அழைக்கப்படுபவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.

3 படத்தின் மூலம் புகழ் பெற்ற இந்த கூட்டணி வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் படங்களில் தொடர்ந்து பணியாற்றினர். மேலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரவுடிதான் படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். குறிப்பாக தனுஷ் - அனிருத் கூட்டணி என்றாலே இசையுலகில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மீண்டும் எப்போது இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம்: தனுஷ் - அனிருத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2015 முதல் 2022 வரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து தனுஷ் - அனிருத் மீண்டும் இணைந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா, தேன்மொழி, தாய் கிழவி பாடல்கள் பெரியளவில் சூப்பர் ஹிட்டானது. ரசிகர்கள் இப்படத்தின் பாடலை ரீல்ஸ் செய்து வைப் செய்தனர். படமும் 100 கோடி வசூலை எட்டியது. அந்த வகையில் தனுஷ் நடிக்கும் 56ஆவது படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக படங்களில் நடிக்கும் தனுஷ்: தற்போது, நடிகர் தனுஷ் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருவதால் மிகவும் பிசியாக இருக்கிறார். தனுஷ் நடிக்கும் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால், தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட் வெளியாவதால் அனிருத் - தனுஷ் கூட்டணி எப்போது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ்: லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் 2ஆவது படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைவதால் படத்தின் பாடல்களும், படமும் 100% ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து லப்பர் பந்து படத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து காதல், காமெடி, சோகம் என சென்டிமெண்ட் காட்சிகளால் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற கெத்து கதாபாத்திரம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றது. அதேபோன்று தனுஷ் - அனிருத், தமிழரசன் பச்சமுத்து கூட்டணி இணையும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











