Tere Ishk Mein Box Office: தேரே இஷ்க் மே முதல் நாள் வசூல்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!
மும்பை: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே படம் நேற்று வெளியான நிலையில், அதன் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்தியில் இந்த ஆண்டு தொடர்ந்து வெளியான பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல ஓபனிங் பெற்று வெற்றியையும் கொண்டாடியது.

இந்நிலையில், Bonafide Blockbuster என படத்தின் அதிகாரப்பூர்வ வசூலுடன் உள்ள போஸ்டரை நடிகர் தனுஷ் ஷேர் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஏர் ஃபோர்ஸ்: பீஸ்ட் படத்தில் விஜய் ஜெட் விமானத்தை ஓட்டும் காட்சி அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஃபைட்டர் படத்திலும் இந்தியன் ஏர் ஃபோர்ஸை காட்டியிருந்தனர். ஆனால், அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், இந்தியன் ஏர் ஃபோர்ஸ் விமானியாக தேரே இஷ்க் மே படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் இருவரும் போட்டிப் போட்டு நடித்து காதலை அள்ளித் தெளித்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளில் ராஞ்சனா படத்தின் கிரேஸ் காரணமாக இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு அலைமோதினர்.
தமிழில் தலைப்பும் இல்லை புரொமோஷனும் இல்லை: குபேரா படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என தனுஷ் புரொமோஷன் பண்ணினாலும் தமிழில் அந்த படத்தை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவே இல்லை. அதே போலத்தான் இட்லி கடை திரைப்படம் தெலுங்கில் ஓடவில்லை. இந்நிலையில், ராஞ்சனா படத்தை அம்பிகாபதி என தமிழில் தலைப்பு வைத்து வெளியிட்டதை போல வெளியிடாமல் தேரே இஷ்க் மே என இந்தி டைட்டிலையே படக்குழு தமிழிலும் வெளியிட்டது. தனுஷ் ரசிகர்களுக்காக தமிழில் டப் செய்து வெளியானாலும் முதல் நாளில் 1 கோடி ரூபாய் அளவுக்கு கூட படம் வசூல் செய்யாத காரணமே இங்கே அந்த படத்தை புரோமோஷனே செய்யாதது தான் என்கின்றனர்.
அதிகாரப்பூர்வ வசூல்: கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என தனுஷ் தீவிரமாக புரொமோட் செய்தாலும், இந்தி படம் என மற்ற மொழி ரசிகர்கள் கண்டுக்கமாட்டார்கள் என்பதற்காகவே புரொமோஷன் செய்யாமல் தனுஷ் விட்டிருக்கலாம் என்கின்றனர். இந்தியில் முதல் நாள் வசூல் 15.06 கோடி ரூபாய் வசூல் வந்ததாக தனுஷ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகளவில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்தும் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
100 கோடி அடிக்குமா?: 2013ம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படமே உலகளவில் தனுஷுக்கு 100 கோடி ஈட்டித் தந்த படம் எனக் கூறப்படுகிறது. அட்ரங்கி ரே திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக கொரோனா காலக்கட்டத்தில் வெளியானது. அதனால், பாக்ஸ் ஆபீஸ் வசூல் இல்லை. இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஞ்சனா மேஜிக்கை தனுஷ் இந்தியில் நடத்துவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட்டிலு இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், சனி, ஞாயிறு வசூலை பொறுத்து தான் படத்தின் வெற்றி தீர்மானமாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











