Dhanush And Mari Selvaraj - மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைந்த தனுஷ்.. வெளியானது அறிவிப்பு
சென்னை: Dhanush And Mari Selvaraj (தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ்) இயக்குநர் மாரி செல்வராஜுடன் நடிகர் தனுஷ் மீண்டும் இணையவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்திருந்தார். வெங்கி அட்லூரி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் பைலிங்குவலாக உருவாகியிருந்த அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பத்தை படம் கொடுத்ததாக ரசிகர்கள் கூறினர். இதனால் தனுஷ் தரப்பு கொஞ்சம் அப்செட் ஆனதாக கோலிவுட்டில் தகவல் பரவியது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்: வாத்தி படத்துக்கு அடுத்ததாக சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். பீரியட் படமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். வாத்தி படம் கொடுத்த தோல்வியால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் தனுஷின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தனுஷின் புதிய படம்: இந்நிலையில் தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 15ஆவது படமாக இப்படம் உருவாகிறது.

இதே நாளில் வெளியான கர்ணன் திரைப்படம்: தனுஷும் மாரி செல்வராஜும் ஏற்கனவே கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மாரி செல்வராஜ் கர்ணன் படத்தில் வரலாற்றை திரித்து கூறிவிட்டதாக ஒருதரப்பினர் குற்றச்சாட்டினை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தனுஷும், மாரி செல்வராஜும் மீண்டும் இணைந்திருக்கிறார். இதற்கிடையே கர்ணன் படம் 2021ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 9) வெளியானது நினைவுகூரத்தக்கது.
மாமன்னன் படத்துக்கு அடுத்தததாக வாழை: மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனையடுத்து அவர் வாழை என்ற படத்தை இயக்குகிறார். இயக்கத்தோடு மட்டுமின்றி டிஸ்னி ஹாட் ஸ்டாரோடு சேர்ந்து அந்தப் படத்தை நவி ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கவும் செய்கிறார். இப்படமானது சிறுவர்களுக்கான சினிமாவாக உருவாகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தின் பணிகளை மாரி செல்வராஜ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











