3 செகண்டுக்கு 10 கோடியா? கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.. கடுப்பான நயன்தாரா!
சென்னை: நயன்தாராவின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நடைபெற்ற நிலையில், நயன்தாரா பற்றியும் அவரது காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை பற்றியும் உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதல் முதலில் காதலிக்கத் தொடங்கிய நானும் ரவுடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த காதல் அனுபவங்கள் மற்றும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் என எதையுமே பயன்படுத்தக் கூடாது என தனுஷ் முட்டுக்கட்டை போட்டு NOC கொடுக்க மறுத்ததால் தான் கடந்த 2 ஆண்டுகளாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகாமல் இருந்தது.

தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த பனிப்போர் தற்போது வெடித்து சிதறியுள்ளது. சுமார் 3 பக்கத்துக்கு நயன்தாரா தனுஷுக்கு சாபம் விடுவதை போலவே ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்த்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
3 செகண்டுக்கு 10 கோடி: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான நயன்தாராவின் Beyond the fairy tale டாக்குமெண்டரி வரும் நவம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒருவழியாக வெளியாகிறது. நானும் ரவுடி தான் படத்தை தனுஷ் தயாரித்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல் வயப்பட்டனர். அதனால், அந்த காட்சிகளும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் பயன்படுத்த நயன்தாரா அனுமதி கேட்க கடந்த 2 ஆண்டுகளாக காத்துக் கிடந்து நொந்து போய்விட்டதாக புலம்பித் தள்ளியுள்ளார். 3 செகண்ட் வீடியோவை பயன்படுத்த தனுஷ் 10 கோடி கேட்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று நயன்தாராவே குறிப்பிட்டுள்ளார்.
ஓம் நமச்சிவாயா: அன்னபூரணி படத்தின் போது ஏற்பட்ட சர்ச்சைக்கு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா ஜெய் ஸ்ரீராம் போட்டு மன்னிப்புக் கேட்டிருந்தார். தற்போது தனுஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தனுஷின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவும் அவர் தனுஷ் பயன்படுத்தும் ஓம் நமச்சிவாயா எனும் வார்த்தையை முதலில் குறிப்பிட்டு இந்த குற்றச்சாட்டு கடிதத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் உடன் 'யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் மீண்டும் தனுஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்காமல் போனதற்கு பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பின. நானும் ரவுடி தான் படத்தை தனுஷ் தயாரித்ததும் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் உடன் இணைந்து நயன்தாரா நடனமாடியதும் சர்ச்சைகள் ஓய்ந்தன. இந்நிலையில், தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மீண்டும் பெரிய பூகம்பமே வெடித்துள்ளது.
கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்: மேலும், தனுஷ் தன்னுடைய நடிப்பை பற்றி குறை சொன்னது மற்றும் தனுஷ் ஒரு சுயநலக்காரர் என சாடியது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் தனுஷ் என ஒரு கட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பொங்கியிருப்பது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











