Dhanush: நான் சொல்லியும் கேட்கல.. வருத்தமா இருக்கு.. ராஞ்சனா ரீ ரிலீஸ் AI காட்சிகளை பார்த்த தனுஷ் அப்செட்!
சென்னை: நடிகர் தனுஷ் இந்தி திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான படம் ராஞ்சனா. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். தமிழில் இந்த படம் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த வாரம் படத்தை படக்குழு ரீ ரிலீஸ் செய்தது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றி அமைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இந்த மாற்றம் தனுஷை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இருந்து இந்தி திரையுலகத்திற்கு பறந்தவர் தனுஷ். ராஞ்சனா படத்திற்காக சில தமிழ் படங்களையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு முன்னரே சில இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அவருக்கு கதை பிடிக்காததால் நடிக்கவில்லை. இப்படி இருக்கும்போது ராஞ்சனாவில் கமிட் ஆகி நடித்தார். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படம் வெளியாகி இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்தாலும், இந்தி வாடை அடித்தாலும், 'முதலுக்கு மோசமில்லை' எனக் கூறும் அளவுக்கு வசூல் செய்து கொடுத்தது.

கிளைமாக்ஸில் மாற்றம்: இந்த படத்தை இந்த வாரத்தில் ரீ ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிறுவனம். இந்த ரீரிலீஸில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியுள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில் படத்தில் நடித்த தனுஷ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனுஷின் வருத்தம்: இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " AI-மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் 'ராஞ்சனா' படம் மறுவெளியீடு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றப்பட்ட இறுதிக் காட்சி, படத்தின் அசல் உணர்வையும் ஆன்மாவையும் மொத்தமாகவே சிதைத்து விட்டது. AI-மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்படுவதற்கு எனது உறுதியான எதிர்ப்பையும் மீறி தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடிக்க ஒத்துக் கொண்ட படம் இதுவல்ல. AI உதவியுடன் திரைப்படங்களையும் அதன் காட்சிகளையும் மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது கதை சொல்லலின் நேர்மையையும், சினிமாவின் ஆன்மாவையும் பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்" என மிகுந்த வருத்தத்துடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வருத்தம்: ஏற்கனவே படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் படத்தின் ரீ ரிலீஸ் குறித்தோ, AI-மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்படுவது குறித்தோ தன்னிடம் தயாரிப்பு நிறுவனம் எதுவும் கலந்துரையாட வில்லை. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார். தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயலுக்கு நடிகரும் இயக்குநரும் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறிப்போனது.


Click it and Unblock the Notifications











