Dhanush: “புதுப்பேட்டையில் பெரிய ஹீரோ நடிக்கணும்” தனுஷின் முடிவை மாற்றிய பிரபலம்.. காரணம் தெரியுமா?
சென்னை: புதுப்பேட்டை இரண்டாம் பாகம் இந்தாண்டு தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார். தனுஷ் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை அவரது கேரியரில் முக்கியமான மைல் ஸ்டோனாக மாறியது. இந்நிலையில் புதுப்பேட்டையில் நடித்தது குறித்து தனுஷ் சொன்ன சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
புதுப்பேட்டையில் நடிக்க மறுத்த தனுஷ்: கோலிவுட்டில் இளம் ஹீரோக்களில் ரொம்பவே பிஸியாக இருப்பவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என தனுஷ் தொடாத உச்சமே இல்லை எனலாம். அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் வெளியாகியிருந்தது. கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை.

இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்தில் பிஸியாகிவிட்டார் தனுஷ். இதன் தொடர்ச்சியாக மேலும் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அதேநேரம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களிலும் தனுஷ் தான் நடிக்கவுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் கடைசியாக நானே வருவேன் திரைப்படம் வெளியானது.
தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் இயக்கி வரும் செல்வராகவன், இந்தாண்டு புதுப்பேட்டை 2 தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இதனால் விரைவில் புதுப்பேட்டை 2ம் பாகம் பற்றி அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே தனுஷின் பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் புதுப்பேட்டை படத்தில் நடிக்க மறுத்தது குறித்து அவர் பேசியுள்ளார்.
அதாவது புதுப்பேட்டை படத்தின் கதையை கேட்டதும் அதில் என்னால் நடிக்க முடியாது என செல்வாவிடம் சொல்லிவிட்டேன். இந்த கதைக்கு வேறொரு பெரிய ஹீரோ இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்னதும், செல்வராகவனும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் வசனகர்த்தா பாலகுமாரன் சார் தான் தன்னை கூப்பிட்டு பேசி சம்மதிக்க வைத்ததாக தனுஷ் கூறியுள்ளார்.
உண்மையான கேங்ஸ்டர்ஸ் எல்லாம் உன்ன மாதிரி ஒல்லியா சிம்பிளா தான் இருப்பாங்க. அதெல்லாம் தெரியாம புதுப்பேட்டை படத்தில் நடிக்காமல் இருக்க வேண்டாம். இந்தப் படம் உன்னோட கேரியர்ல பெரிய மாற்றம் கொடுக்கும் என கூறினார். அதேபோல், புதுப்பேட்டை வெளியானதும் நிறையவே மாறியது என தனுஷ் உருக்கமாக பேசியுள்ளார். 2006ல் வெளியான புதுப்பேட்டை இப்போதும் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக இருப்பதே இப்படத்தின் தனிச் சிறப்பு.
அதேபோல் தனுஷுக்கு நடிகனாகவும் பெயர் எடுத்துக் கொடுத்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தனுஷின் த்ரோபேக் பேட்டியான இந்த வீடியோ ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











