Dhanush: கமல், கார்த்தி, விஜய் கூட்டணி மிஸ்ஸிங்... தனுஷுடன் இணையும் H வினோத்... இதுதான் கதையா..?
சென்னை: தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கும் D 51 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் இயக்கி நடித்துள்ள D 50 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் 52வது படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷுடன் இணையும் H வினோத்
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச் வினோத். இரண்டாவதாக கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில், அதன் பின்னர் அஜித்துடன் இணைந்த வினோத், அவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார். இதில் இறுதியாக வெளியான துணிவு ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனையடுத்து கமலின் 233வது படத்தின் இயக்குநராக கமிட்டானார் ஹெச் வினோத். இதுகுறித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும், KH 233 ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்காக ஹெச் வினோத்துக்கு தனியாக ஒரு ஆபிஸையும் ரெடி செய்து கொடுத்திருந்தது. ஆனால் அந்தப் படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த தீரன் அதிகாரம் இரண்டாம் பாகத்தை இயக்கலாம் என்றிருந்தார் வினோத். ஆனால், கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதேபோல் அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், கடைசியாக ஒரு பொலிட்டிக்கல் ஜானர் மூவியில் நடிக்க பிளான் செய்துள்ளார். அதனை H வினோத் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், தளபதி 69 இயக்குநர் ரேஸில் வெற்றிமாறன் தான் முன்னிலையில் இருக்கிறார். இதனால் பொறுமையிழந்த ஹெச் வினோத் தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளாராம். ஏற்கனவே தனுஷுக்கு கதை கூறி அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தார். இந்நிலையில் இப்போது ஹெச் வினோத் எந்த படமும் இயக்கவில்லை என்பதால் D 52 படப்பிடிப்பை தொடங்க தனுஷ் ஓகே சொல்லிவிட்டாராம்.
அதன்படி தனுஷ் - வினோத் இணையும் படத்தின் ஷூட்டிங் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. போலீஸ் ஜானர் மூவியாக உருவாகவுள்ள இதில் தனுஷின் ஆக்ஷன் சீன்ஸ் தரமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீரன் அதிகாரம் ஸ்டைலில் தனுஷுக்காக செம்மையான ஸ்க்ரிப்ட் உடன் ஹெச் வினோத் காத்திருக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











