தனுஷுக்கு ரஜினியின் பட்டம் எல்லாம் வேண்டாம், ஆனால் ....
சென்னை: தனுஷுக்கு மாமனார் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது எல்லாம் ஆசை இல்லை. அவர் ஆசைப்படுவது வேறு ஒன்றுக்கு தான்.
சூப்பர் ஸ்டார் டைட்டிலை பெற சில நடிகர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்வது இல்லை. எந்த நடிகரின் ரசிகர்களாவது அந்த பட்டத்தை பயன்படுத்தினால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துவிடுகிறார்கள். ஒரே சூரியன், ஒரே நிலா, ஒரே சூப்பர் ஸ்டார் அது எங்கள் தலைவர் ரஜினி என்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதே ரசிகர்களுக்கு ஒரு தனி சந்தோஷமாக உள்ளது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவருக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார். அந்த பட்டத்தால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ட்விட்டரில் கூட இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து அமர்க்களப்படுத்தினார்கள். இந்நிலையில் தனுஷோ, கண்ணா எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களாகிய உங்களின் அன்பு மட்டும் கிடைத்தால் அதுவே போதும் என்றார்.
தனுஷுக்கு தாணு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்ததை பார்த்த ரஜினி ரசிகர்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளானார்கள். தலைவரின் மாப்பிள்ளையாச்சே, என்ன செய்வது என்று அமைதியாக இருந்தார்கள். இந்நிலையில் தனுஷ் தனக்கு பட்டம் எதுவும் வேண்டாம் என்று கூறியதை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவர் நல்லவரை தான் தன் மாப்பிள்ளையாக தேர்வு செய்திருக்கிறார் என்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்பவில்லை. அவர் எதிர்பார்ப்பது எல்லாம் தனக்கு பிடித்த தலைவருடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தான். கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் சேர்ந்து நடிக்க எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மாமனாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார். தன் ஆசையை அவர் பல முறை வாய்விட்டு கூறிவிட்டார்.
ரஜினி இந்த விஷயத்தில் மட்டும் அமைதியாக உள்ளார். அவர் தனுஷுடன் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் உள்ளது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். தலைவர் அமைதியாக இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.


Click it and Unblock the Notifications











