13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’!
புதுப்பேட்டை திரைப்படம் வெளிவந்து 13 ஆண்டுகள் நிறைவடைவந்ததை, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படம் வெளிவந்து 13 ஆண்டுகள் நிறைவடைவந்ததை, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காதல் கொண்டேன் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கிய படம் புதுப்பேட்டை. தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2006ம் ஆண்டு மே 26ம் தேதி வெளியானது.
புதுப்பேட்டை படம் வெளியான நேரத்தில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் அது.

புதுப்பேட்டையின் கருத்தியல்
அதற்கு முக்கிய காரணம் படத்தின் கருத்தியல். புதுப்பேட்டையில் பேசப்பட்ட அரசியலும், ரவுடியிசமும் மிகவும் புதுமையானது. 'சிட்டி ஆப் காட்ஸ்' படத்தின் தழுவல் தான் புதுப்பேட்டை. குடிசைப் பகுதியில் வாழும் ஒரு சாதாரண இளைஞன், அனைவரையும் ஆட்டுவிக்கும் அதிகார மையமாக எப்படி மாறுகிறான் என்பதை அருமையாக படமாக்கி இருப்பார் செல்வா.

ரவுடியின் கதை
ஒரு ரவுடி எப்படி உருவாகிறான், அவனை எப்படி அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை, உண்மைக்கு பக்கத்தில் இருந்து காட்டியிருப்பார். இது தான் புதுப்பேட்டை படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாட காரணம். குறிப்பாக தனுஷின் பாத்திர வடிவமைப்பு ஒவ்வொரு முறை படம் பார்க்கும் போதும் நம்மை பிரம்மிக்க வைக்கும்.

மறக்க முடியாத அனுபவம்
தனுஷின் ஆக்ரோஷமான நடிப்பும், சினேகாவின் கதாபாத்திரமும், சோனியா, அழகம்பெருமாள் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பும், புதுப்பேட்டை படத்தை ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. இன்றளவும் தொலைக்காட்சியில் புதுப்பேட்டை ஒளிபரப்பப்படும் போதெல்லாம், பெரும்பான்மை சினிமா ரசிகர்கள், திரும்ப திரும்ப பார்க்கும் படமாக இருக்கிறது.

விஜய் சேதுபதி முகம்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்திருக்கும் விஜய் சேதுபதி முதன்முதலில் தனது முகத்தை காட்டியது புதுப்பேட்டையில் தான். ஒரு சில காட்சிகளில், பத்தோடு பதினொன்றாக விஜய் சேதுபதி நிற்கும் படத்தை பார்க்கும் போது, வாழ்க்கை சக்கரம் ஒருவரை எந்த அளவுக்கு இடமாற்றம் செய்யும் என்பதை உணர்த்தும்.

புதுப்பேட்டை 2 எப்போது?
புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்பது செல்வராகவன் ரசிகர்களின் விருப்பம். ஆனால் அவரோ ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்க ஆசைப்படுகிறார். இந்நிலையில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் என்ஜிகே படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம். இந்த படத்தின் வெற்றியை வைத்தே, புதுப்பேட்டை 2 பாகத்தை தீர்மானிக்க திட்டமிட்டுள்ளார் செல்வா. சீக்கிரம் முடிவு செய்யுங்கள் செல்வா. நாங்கள் காத்திருக்கிறோம்.


Click it and Unblock the Notifications











